ஜேர்மனியில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. பதவிக் காலம் நிறைவு பெற்ற தற்போதைய சேஞ்சலரான ஏஞ்சலா மேர்கெலின் கிறித்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சி சொந்த இடம் உட்பட பல இடங்களில் தோல்வியைச் சந்தித்திருந்தது.
விரைவில் ஏஞ்சலா மேர்கெல் பதவி விலகவுள்ள நிலையில் அங்கு 16 ஆண்டுகளுக்குப் பின்பு ஆட்சி மாற்றம் நிகழவுள்ளது.
மேலும் ஜேர்மனியில் இந்த ஆட்சி மாற்றத்தின் போது இப்போதைய நிலவரப்படி 3 கட்சிகள் கூட்டணி சேர்ந்தே ஆட்சியமைக்கும் சூழல் உள்ளது. இவ்வாறு இடம்பெற்றால் ஜேர்மனியின் அரசியல் வரலாற்றில் 3 கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பது இதுவே முதன் முறையாகவிருக்கும்.
இதேவேளை ஜப்பானில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை ஆளும் கட்சியினரான LDP எனப்படும் லிபரல் ஜனநாயகக் கட்சியினர் தமக்குள் இன்று புதன்கிழமை மேற்கொள்ளவுள்ளனர். கடந்த ஒரு வருடமாக ஜப்பான் பிரதமராகக் கடமையாற்றிய யோஷிஹிடே சுகா இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில் வெற்றி பெறவுள்ளவர் சில நாட்களுக்குள் ஜப்பான் பாராளுமன்றத்தினால் பிரதமராக நியமிக்கப் படுவார். இதையடுத்து அதிகாரத்தில் இருப்பதற்கான பொதுத் தேர்தலில் LDP கட்சியினர் சார்பாகவும் இவர் போட்டியிடுவார். உலகின் 3 ஆவது மிகப் பெரிய பொருளாதார சக்தியான ஜப்பானில் இம்முறை நடக்கும் பிரதமர் தேர்வு மிக இறுக்கமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.