தலிபான்கள் ஆட்சியில் தம்மை நிலைப் படுத்திக் கொள்ள இயலாத வெளிநாட்டவர் தாயகம் திரும்புவதை உறுதி செய்யும் இறுதித் தினமாக ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றாக வாபஸ் பெறும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி அமைந்துள்ளது.
இந்தக் காலக்கெடுவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடென் மிக உறுதியாக உள்ளதால் தமது நாட்டவரைப் பாதுகாப்பாக மீட்க எண்ணும் பிற சர்வதேச நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன.
குறித்த காலக்கெடுவை அனைத்து வெளிநாட்டவரும் ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேறும் வரை நீட்டிக்க G7 அமைப்பைச் சேர்ந்த இந்நாடுகள் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்த போதும் அதிபர் ஜோ பைடென் விடாப் பிடியாக இருப்பதால் தமது நட்பு நாடுகளுடன் அமெரிக்காவுக்கு சற்று மனக்கிலேசம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. ஆனாலும் வருங்காலத்தில் ஆப்கான் மக்களது பாதுகாப்புக்கும், தலிபான்களது நல்லாட்சிக்கும் நாம் தோளுக்குத் தோள் நிற்பது அவசியம் என காணொளி வாயிலான பேச்சுவார்த்தையில், பைடென் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
தலிபான்களது கட்டுப்பாட்டையும் மீறி ஆப்கானில் இருந்து வெளிநாட்டவரை மீட்க சர்வதேசம் இன்னமும் அதிக விமான சேவைகளை அளிக்கவும், அவகாசம் அளிக்கவும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மீட்புப் பணியை காபூல் விமான நிலையம் மீதான தீவிரவாதத் தாக்குதல்கள் இன்றி பாதுகாப்பாக மேற்கொள்ள இப்போது இருக்கும் சுமார் 5800 அமெரிக்கத் துருப்புக்கள் ஆகஸ்ட் இறுதிக்குப் பின்பும் சேவையில் நீட்டிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அதிகளவு விமான மீட்புக்களைச் செய்யலாம் என்றும் சர்வதேசம் அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளது.
2001 செப்டம்பர் 11 இல் நியூயோர்க் மீதான இரட்டைக் கோபுரத் தீவிரவாதத் தாக்குதலின் பின் ஆப்கானிஸ்தானை முற்றுகையிட்ட அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு 20 வருடம் போரிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்ட பின் வெகு விரைவில் இவ்வருடம் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் முற்றாக வாபஸ் பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.