சுவீடன் பாராளுமன்றம் தனது நாட்டின் நிதியமைச்சரான மகடலேனா அண்டெர்ஸ்ஸன் என்ற 54 வயதாகும் பெண்மணியை அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக நியமிக்க புதன்கிழமை பரிந்துரை செய்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் தான் மகடலேனா ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றிருந்தார்.
மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படும் ஓய்வூதியம் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை இடதுசாரிக் கட்சியின் சம்மதத்துடன் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியிருந்தார். இந்த ஒப்பந்தமானது வறிய ஓய்வூதியம் பெறும் மக்களுக்கான உதவியை வலுப்படுத்தும் என அது நிறைவேற்றப் பட்டதும் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
சுவீடனில் அந்நாட்டு சட்டப்படி பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை நிரூபித்தால் தான் பிரதமர் பதவியை அடைய முடியும் என்பது கிடையாது. ஆனால் அவருக்கு எதிராக பெரும்பான்மை வாக்குகள் இருக்கக் கூடாது என்பதும் முக்கியமானதாகும். அண்டெர்ஸ்ஸன் ஏற்கனவே சமூக ஜனநாயகக் கட்சியின் கூட்டணியான கிறீன்ஸ் மற்றும் மத்திய கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் சில மணித்தியாலங்களில் சுவீடன் பாராளுமன்றத்தில் புதிய பிரதமருக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. ஐரோப்பாவின் வடக்கு நாடுகளான நோர்வே, டென்மார்க், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் ஏற்கனவே தமது அரசின் பிரதமர் போன்ற உயர் பதவிகளில் பெண்மணிகளை ஏற்கனவே அமர்த்தியிருந்த நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் சுவீடனும் இணைகின்றமை குறிப்பிடத்தக்கது.