புதன்கிழமை பகல் வலிமையுடன் அமெரிக்காவின் வடக்கு புளோரிடா மாகாணத்தைக் கடந்த பருவ நிலை புயலான எல்சா தற்போது பலவீனம் அடைந்துள்ளது என அமெரிக்க தேசிய ஹரிக்கேன் நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீவிர புயல் காரணமாக ஒரு சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாகவும், மரங்கள் முறிந்து விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனாலும் யாருக்கும் மோசமான காயங்களோ அல்லது மோசமான பொருட் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை. புளோரிடா மாகாணம் முழுவதும் சுமார் 26 000 இற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. ஜூலை 2 ஆம் திகதி அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்பரப்பில் ஏற்பட்ட எல்சா புயல் படிப்படியாக வலுவடைந்து 5 ஆம் திகதி கியூபாவைக் கரை கடந்தது. புதன்கிழமை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் டைலர் கவுண்டி பகுதியில் இது கரையைக் கடந்தது.
இதன் போது பலத்த மழையும், பல பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டது. ஆயினும் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் ஜோர்ஜியாவைக் கடந்து தற்போது தெற்கு கரோலினாவை நோக்கி இது நகர்ந்து வருகின்றது. மின் துண்டிப்புக்களை விரைந்து சரிப்படுத்த மின்சாரத் துறை ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.