ஆப்பிரிக்காவின் மிக அதிக சனத்தொகை கொண்ட நாடான நைஜீரியாவின் வடமத்திய பகுதியில், துப்பாக்கிதாரிகள் 3 சீனக் குடிமக்களைக் கடத்திச் சென்றிருப்பதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் அபுஜாவுக்கு அண்மையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது துப்பாக்கி தாரிகள் 2 நைஜீரியர்களை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகின்றது.
நைகர் மாநிலத்தில் குஸ்ஸாஸே என்ற கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருக்கும் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் இவர்கள் அனைவரும் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகின்றது. உடனே விரைந்து வந்த போலிசார் பதிலுக்குத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் 4 வெளிநாட்டவர் மீட்கப் பட்டதாகவும், மீட்கப் பட்டவர்களில் சிலருக்கு தோட்டா பாய்ந்திருந்ததாகாவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கடத்திச் செல்லப் பட்டுள்ள சீனப் பணயக் கைதிகளை மீட்க போலிசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். நைஜீரியாவில் கடந்த காலத்திலும், பல குற்றவியல் குழுக்கள் அதிகளவு வெளிநாட்டவரைக் கடத்தி வந்த போதும், சமீப காலமாக பாதுகாப்புப் படையினரின் முயற்சியால் இந்த எண்ணிக்கை குறைந்தே வந்தது. நவம்பரில் சீனா தனது குடிமக்களுக்கு, நைஜீரியா உட்பட வேறு பல ஆப்பிரிக்க பகுதிகளுக்கு விஜயம் செய்வது மிகவும் அபாயகரமானது என்று எச்சரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.