2014 ஆமாண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்து ஏற்கனவே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நிலவி வந்த இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது.
அதுவும் 2021 ஆமாண்டு இறுதி முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளையும் ஆயுதங்களையும் குவித்து வருவதால் மத்திய கிழக்கில் இது மிகப் பெரும் போர்ப் பதற்றமாக மாறியுள்ளது.
ஆனால் உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பைச் சேர்ந்த நாடுகளும், அமெரிக்காவும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் சுமார் 1 இலட்சம் ரஷ்யத் துருப்புக்கள் குவிக்கப் பட்டுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் பைடென் மீண்டும் ஒருமுறை பகிரங்க எச்சரிக்கையை வெள்ளை மாளிகையில் இருந்து விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் அதிபர் பைடென் பேசிய போது, 'உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் பேரழிவையும், பெரும் உயிரிழப்பையும் சந்திக்க நேரிடும். மேலும் பொருளாதார ரீதியாக ரஷ்யாவுக்குக் கடும் பின்னடவை ஏற்படுத்த நாமும், எமது நட்பு நாடுகளும் தயாராக உள்ளோம். சுமார் 600 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளோம்.' என்றுள்ளார்.
மேலும் இதே சூழலில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் புதன்கிழமை உக்ரைனுக்குச் சென்றுள்ளமையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப் படுகின்றது.