திங்கட்கிழமை உலக அரங்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப் பட்ட அமெரிக்க அதிபர் பைடென் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையேயான 2 ஆவது சந்திப்பு காணொளி வாயிலாக இடம்பெற்றது.
இதன் முக்கிய அம்சமாக தைவான் விவகாரத்தில், தைவானின் சுதந்திரமான போக்கிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் நெருப்புடன் விளையாடக் கூடாது என அதிபர் ஜின்பிங் பைடெனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தவிர ஜின்ஜியாங் உய்குர் முஸ்லிம்கள் மனித உரிமைகள் விவகாரம், திபேத் மற்றும் ஹாங்கொங் தொடர்பிலும் ஜோ பைடென் பேசியதற்கு, பதிலளித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனாவின் இந்த உள்நாட்டு விவகாரங்களில் வெளியே இருந்து வரும் தலையீடுகளை விரும்பவில்லை என விளக்கமளித்துள்ளார்.
உலகின் இரு முக்கிய பொருளாதார வல்லரசுகளான இவ்விரு நாடுகளுக்கும் இடையே அசாதாரண நிலை நிலவி வரும் போதிலும், இச்சந்திப்பில் வர்த்தகம், மனித உரிமை, கோவிட் பெரும் தொற்று, காலநிலை மாற்றம் ஆகியவை குறித்தும் வெளிப்படையாக பேசப்பட்டது. சுமார் 2 மணி நேரம் இடம்பெற்ற இந்த உரையாடலானது மரியாதைக்குரிய ஒன்றாக அமைந்திருந்தது என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடென் பதவியேற்று ஓராண்டு நிறைவுறும் தருவாயில் உள்ள நிலையில், 2 ஆவது முறையாக சீன அதிபருடன் காணொளி சந்திப்பாக இடம்பெற்ற இச்சந்திப்பும் பெரும்பாலும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல், பொருளாதார பதற்றங்களைத் தணிக்கும் முயற்சியாகக் கருதப் படுகின்றது.