கோவிட்-19 பெரும் தொற்று காரணமாக அமெரிக்க அதிபராக ஜோ பைடென் பதவியேற்று பல மாதங்கள் ஆகியும் அவர் இதுவரை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் முதன்முறையாக அவர் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலைவர்களை நேரில் சந்திக்கவுள்ளார்.
இந்தப் பயணமானது உலகளவில் ஜனநாயகத்தைக் கட்டிக் காக்க வேண்டிய முக்கிய தருணத்தில் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள பைடன் ரஷ்ய அதிபர் புடினை ஜெனீவாவில் சந்திக்க முன்னர் G7, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடுகளில் பங்கேற்கவுள்ளார். எதிர்வரும் வெள்ளி முதல் ஞாயிறு வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களை பைடென் சந்திப்பார்.
பின்பு ஜூன் 14 ஆம் திகதி புருஸ்ஸெல்ஸ் சென்று நேட்டோ கூட்டணி நாடுகளின் சந்திப்பிலும், அடுத்த நாள் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார். இதன் பின்பே பைடென் புடினை சந்திக்கவுள்ளார். இதேவேளை செவ்வாய்க்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபையான UNSC ஓர் முக்கிய பரிந்துரையை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த வருடம் பதவிக் காலம் முடிவடையவுள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் இன்னமும் மேலதிக 5 வருடங்களுக்கு 2 ஆவது முறையும் பொதுச் செயலாளராகப் பதவி வகிக்கவே உலக நாடுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
இந்த 2 ஆவது பதவிக் காலம் 2022 ஜனவரி 1 ஆம் திகதி தொடங்குகின்றது. சுமார் 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா பொதுச் சபைக்கும், 15 முக்கிய உறுப்பு நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு சபைக்கும் உரிய மிக உயர்ந்த பதவி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் இந்தியா அமையாத போதும், குட்டெரஸின் 2 ஆவது பதவிக் காலத்தைத் தான் வரவேற்பதாக அறிவித்துள்ளது.