free website hit counter

4தமிழ்மீடியாவின் வாராந்த உலகச் செய்திகள்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இஸ்ரேலிய புலனாய்வுடன் தொடர்புடைய 4 பேருக்கு ஈரான் மரண தண்டனை

இன்று ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் புலனாய்வுத் துறைக்காக செயற்பட்டதாகக் குற்றம் சாட்டி 4 பேருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஷியோனிஸ்ட் புலனாய்வுக்காகச் செயற்பட்டதற்காக இன்று காலை இந்த 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டதாக இஸ்ரேலிய நீதித்துறையான மிஷானின் இணையத் தளம் உறுதிப் படுத்தியுள்ளது.

ஈரானின் சுப்ரீம் கோர்ட்டால் புதன்கிழமை விதிக்கப் பட்ட இந்த தண்டனைக்கு மறு மனுத்தாக்கல் கிடையாது என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது. தண்டனைக்கு உள்ளானவர்களது பெயர் விபரம் ஊடகங்களில் வெளியாகி உள்ள போதும் அவர்களது பின்னணி குறித்த எந்தத் தகவலும் வெளிவிடப்படவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் மூவருக்கு ஆயுதக் கடத்தல் குற்றத்திற்காக 5 முதல் 10 வருடங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டுள்ளது.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலமாக ஒரு நிழல் யுத்தம் இடம்பெற்று வருகின்றது. தனது அணுவாயுதப் பகுதிகளை நோட்டமிட்டு தாக்குதல் நடத்தியது மற்றும் தனது அணு விஞ்ஞானிகளைக் கொலை செய்தது என இஸ்ரேல் மீது பல குற்றச்சாட்டுக்களை ஈரான் அடுக்கியுள்ளது. இதேவேளை மனித உரிமைகள் அமைப்பின் தகவல் படி உலகில் சீனாவுக்கு அடுத்து வருடாந்தம் அதிகளவு பேருக்கு மரண தண்டனை அளிக்கும் நாடாக ஈரான் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தோனேசியாவின் செமெரு எரிமலை சீற்றம்! : அதிகபட்ச எச்சரிக்கை

இந்தோனேசியாவின் ஜாவாத் தீவிலுள்ள செமெரு எரிமலை சீற்றம் அடைந்துள்ளது. இதனால் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதுடன், எரிமலை அமைந்துள்ள பகுதிக்கு அருகே பல்லாயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப் பட்டும் வருகின்றனர்.

இதுவரை யாரும் பாதிக்கப் படவில்லை என்ற போதும் எரிமலைக்கு அருகே குறைந்த பட்சம் 8Km இற்கு அப்பால் வரை பொது மக்கள் வெளியேற்றப் படுகின்றனர். மேலும் இந்த எரிமலை வெடிப்பின் தீவிரம் காரணமாக ஜப்பான் தனது தெற்கே தொலைவிலுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

CVGHM எனப்படும் இந்தோனேசிய அனர்த்த முகாமை அமைப்பு குறித்த எரிமலை வெடிப்பின் எச்சரிக்கை அளவு அதிகபட்சமாக 4ஆக இருப்பதால் பொது மக்களது வீடுகளுக்கும், குடியிருப்புக்கும் நிச்சயம் ஆபத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. 3676 மீட்டர் உயரமான செமெரு எரிமலை தற்போது ஜாவா குழம்பை கக்கி வருகின்றது. மேலும் எரிமலை சாம்பல் தற்போது பெய்து வரும் பருவ மழையுடன் கலந்து மாசினை ஏற்படுத்தி வருவதால் பொது மக்களது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்திருக்கும் செமெரு எரிமலை ஜாவாத் தீவில் அமைந்துள்ள மிகப்பெரிய ஆக்டிவ் எரிமலை ஆகும். கடந்த வருடம் இது சீற்றமடைந்த போது கிட்டத்தட்ட 50 பொது மக்கள் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் ஜகார்த்தாவுக்கு கிழக்கே ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம் 300 பேருக்கும் அதிகமானவர்களைப் பலி கொண்டிருந்தது.

 

 

ரஷ்யாவின் காஷ்பியன் கடல் அருகே அரிதான 700 சீல்கள் மரணம்

அழிந்து வரும் அரிதான கடல் சீல்களில் சுமார் 700 சீல்கள் ரஷ்யாவின்வ வடக்கு கௌகாசுஸ் காஸ்பியன் கடற்கரைப் பகுதியில் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

IUCN எனப்படும் சர்வதேச அருகி வரும் உயிரினங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், உலகில் காஸ்பியன் கடலில் மட்டுமே காணப் படக் கூடிய இந்த அரிதான பாலூட்டியான சீல்வகைகள் 2008 ஆமாண்டு முதல் வேகமாக அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஸ்பியன் கடற் பரப்பில் இறந்து ஒதுங்கியுள்ள சீல்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப் படுகின்றது. இவற்றின் இறப்புக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இந்த சீல்கள் கண்டறியப்பட்ட டஜெஸ்டான் பகுதியுடன் சேர்ந்த கேஸ்பியன் கடல் தான் உலகில் நிலப்பரப்புக்களால் முழுவதும் சூழப்பட்ட மிகப்பெரும் நீர்ப்பரப்பாகும்.

அதிகளவு வேட்டையாடப் படல், காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விடம் அழிக்கப்படல் போன்ற காரணிகளால் காஸ்பியன் சீல்கள் வேகமாக அழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

ரஷ்யாவின் உத்தரவாதத்தை சர்வதேசம் கருத்தில் கொள்ள வேண்டும் : எமானுவேல் மேக்ரோன்


சனிக்கிழமை ஊடகப் பேட்டியின் போது பிரெஞ்சு அதிபர் எமானுவேல் மேக்ரோன் உக்ரைனுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புடின் முன்வந்தால் அவர் கட்டாயம் அளிக்கக் கூடிய பாதுகாப்பு உத்தரவாதத்தை உலக நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக மேக்ரோன் கூறுகையில் ஐரோப்பா தனது வருங்காலப் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் போது நேட்டோ அருகே வருவது குறித்தோ அல்லது ஆயுதங்களை நிலை நிறுத்துவது குறித்தோ ரஷ்யா அச்சம் கொண்டுள்ளது என்றார்.

இதேவேளை அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய இராஜதந்திர அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது, ரஷ்யாவுக்கு சமாதான நோக்கம் சிறிதும் நாட்டம் இல்லை என்றும் தனது காட்டுமிராண்டித் தனமான போரை புதிய வழிகளில் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்தே அது சிந்தித்து வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் உக்ரைனில் நடக்கும் யுத்தத்தில் நாம் தலையிட மாட்டோம் என பெலாருஸ் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களில் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்த போது ரஷ்யாவுக்கு ஆதரவாக தனது துருப்புக்களை உக்ரைன் எல்லையில் பெலாருஸ் நிறுத்தியிருந்தது. அதன்போது மேற்குலகிடம் இருந்தும், உக்ரைனிடம் இருந்தும் தமக்கு அச்சுறுத்தல் இருந்ததாக பெலாருஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷெங்கோ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்தோனேசியாவில் திருமணம் அற்ற பாலுறவை குற்றமாக்கும் சட்டம் மீண்டும்?

2019 ஆமாண்டு இந்தோனேசியாவில் திருமணம் செய்தவர்கள் இன்னொருவருடன் பாலுறவு வைத்துக் கொள்வதைக் குற்றமாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வர முற்பட்ட போது கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

நாடு முழுவதும் பாரியளவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப் பட்டன. இதனால் இந்த சட்ட மசோதாவை அமுலாக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப் பட்டது. ஆனால் தற்போது இவ்வருடம் டிசம்பர் 15 ஆம் திகதி இந்த சட்டம் மீண்டும் அமுலாக்கப் பட நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசிய நிதிமந்திரி எட்வர்ட் உமர் ஷெரீப் ஹியாரிஜ் இத்தகவலை வெளியிட்டுள்ளார். இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டால் அது இந்தோனேசியாவில், திருமணத்துக்கு முன்போ அல்லது திருமணத்துக்குப் பின் வேறு ஒருவருடனோ பாலியல் உறவு வைத்துக் கொள்வதைக் குற்றச் செயலாக்குகின்றது.

மேலும் இதன் போது கைது செய்யப் பட்டால் குறைந்த பட்சம் ஓராண்டு சிறைத் தண்டனை கிட்டவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula