பொலன்னறுவை – மன்னம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தொன்றே கொட்டளி பாலத்திற்கு அருகில் விபத்திற்குள்ளாகியது.
பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றில் வீழ்ந்தமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தின் அதிவேக பயணமும், சாரதியின் கவனக்குறைவுமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பேருந்து விபத்தினால் காணாமல் போனவர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்பதை கண்டறியும் வகையில், பேரூந்து ஆற்றில் விழுந்த இடத்தில் நீர்மூழ்கிக் குழுவினர் தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, விபத்துக்குள்ளான பேருந்து நேற்று இரவு கிரேன் உதவியுடன் ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.