மைத்திரியின் வழக்கிலிருந்த நீதிபதி விலகல்
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, இந்த மனுவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமின் உறுப்பினரான நீதிபதி நீல் இத்தவெல இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மன்றுக்கு அறிவித்தார்.
அதன்படி, உரிய வெற்றிடத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரக்கோன் பெயரிடப்படுவதாகவும் தலைமை நீதிபதி அறிவித்தார்.
இதன்படி, நிஷங்க பந்துல கருணாரத்ன, சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, தம்மிக்க கணேபொல மற்றும் டி. என். சமரகோன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16, 17, 18 மற்றும் 20 ஆம் திகதிகளில் விசாரணை நடத்துவதற்கு திகதிகள் நிர்ணயிக்கப்பட்டன. உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்த போதிலும், அதனை தடுக்காமை ஊடாக குற்றவியல் கொலை மற்றும் பிற குற்றச் செயல்களின் கீழ் அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட இருவரினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டை பரிசீலித்த கோட்டை நீதவான், பிரதிவாதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்தார்.
இந்த அழைப்பாணை சட்டவிரோதமானது என்றும் அது தொடர்பான தனிப்பட்ட முறைப்பாட்டை வலுவிழக்க செய்து ரிட் ஆணையை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.