நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கஷ்டமான காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்தை முன்வைத்த ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே என அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று பிரச்சினை தீர்த்துக்கொள்ளுமாறு தான் தொடர்ந்தும் கூறிய போதிலும் அரசாங்கம் அதனை விரும்பவில்லை என்றால் செய்வதற்கு எதுவுமில்லை.
தற்போது அடுத்த கட்ட முடிவு மக்களின் கைகளிலேயே உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்ற போதிலும் அந்த காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த நிவாரண உதவிகளும் இரத்துச் செய்யும் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை.
நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியையும் பெற்றுக்கொண்டு சரியான நோக்குடன் செயற்பட்டதன் காரணமாகவே அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்ததுடன் ஏனைய நிவாரணங்களையும் வழங்க முடிந்தது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.