free website hit counter

குழந்தை கடத்தல் - நடந்தது என்ன?

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
53 வயதுடைய சந்தேகநபர் உட்பட ஐந்து சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
பிச்சை எடுக்கும் பெண் ஒருவரின் ஒன்றரை வயது குழந்தையை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று இரவு வனாத்தவில்லுவ பிரதேசத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .இவருடன் சேர்த்து குழந்தையை ஏற்றிச் செல்ல உதவிய தரகர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரான பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் நிமித்தமாக இருப்பதாகவும், 7 மாத கர்ப்பகாலத்தில் குறித்த பெண் கொழும்பில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போது தனது குழந்தையை இழந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் அந்த பெண் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக வேறு ஒரு குழந்தையை தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளார், அதன் காரணமாக தெமட்டகொட பிரதேசத்தில் தெரிந்த நபரின் உதவியை நாடியுள்ளார். குறித்த நபர், குழந்தையைத் தேடி பெண்ணை தெமட்டகொட, பொரளை மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளுக்கு அழைத்துச் சென்றதாகவும், இதன் போது செருப்புத் தொழிலாளி ஒருவர் பெண் ஒருவருடன் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டிருந்த இருவருடனும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிச்சை எடுக்கும் பெண் முதலில் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தாலும் பின்னர் அவர் மறுத்துவிட்டார். பிச்சையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் கொம்பனித்தீவில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த போது சந்தேகத்திற்குரிய பெண் குழந்தையை கடத்திச் சென்று வாடகை வாகனத்தில் வனாத்தவில்லுவைக்கு திரும்பியுள்ளார்.

பிச்சை எடுக்கும் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் முச்சக்கரவண்டியை சிசிடிவி ஆதாரங்களின் ஊடாக கண்டுபிடித்ததன் மூலம் குறித்த குழுவினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிச்சை எடுக்கும் பெண்ணும் அவரது கணவரும் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரும், 53 வயதுடைய சந்தேகநபர் உட்பட ஐந்து சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula