சீரற்ற காலநிலையால் நாட்டின் பல்வேறு பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
தொடர் மழை காரணமாக மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா, சாமிமலை, நல்ல தண்ணி ஆகிய பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக மவுஸ்ஸாகலை, கெனியோன், லக்ஷபான, நவலக்ஷபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீர் தேக்ககங்களின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளது.
இதன்காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவும், கெனியோன் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவும் திறந்து விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ..
இதனால் தாழ் நிலப்பகுதியில் உள்ள மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு லக்ஷபான நீர்மின் நிலைய உயரதிகாரி ஒருவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஹங்குரன்கெத்த பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஹேவாஹெட்ட பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாகப் பெய்துவரும் தொடர் மழைக்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹேவாஹெட்ட பகுதியிலிருந்து முல்லோயா, ரொக்வூட், ஹோப் ஆகிய பெருந்தோட்டப் பகுதிகளுக்கு செல்லும் முல்லேரியா பிரதான வீதியும் நீரில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக முல்லேரியா பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் மக்களும் வாகன சாரதிகளும் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அத்துடன் சில தொடர் குடியிருப்புக்களில் வெள்ளநீர் புகுந்துள்ளதுடன், சில இடங்களில் மண்சரிவு அனர்த்தங்களும் பதிவாகியுள்ளன.