இலங்கை துறைமுகத்தில் சிக்கி தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறியுள்ளார்.
வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதன்போது மக்களின் உயரும் வாழ்க்கைச் செலவில் கவனம் செலுத்தி, துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களின் பங்குகளை உடனடியாக வெளியிடுமாறு பிரதமர் அறிவுறுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து வாழ்க்கைச் செலவுக் குழு எடுத்த முடிவுக்கு ஏற்ப சதொச மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களின் இறக்குமதியாளர்கள் மூலம் விடுவிக்கப்படும் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று கூறியுள்ளார்.