காப்புறுதி உரிமையாளர் தரப்பில் சாதகமான பதில்
சட்டமா அதிபர் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதியாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் ஜூலை 18ஆம் 19 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரி, இலங்கை அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் தாக்கல் செய்த வழக்கை அடுத்து, தமது கட்சிக்காரர் சார்பில் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தின் முக்கிய விடயங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து இரு தரப்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, மீன்பிடி அமைச்சு ஆகியவை சமர்ப்பித்த இடைக்கால நட்டஈடு மதிப்பீடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை மதிப்பீடு உடனடியாக மேற்கொள்ளப்படும் என கப்பல் உரிமையாளரின் காப்புறுதியாளர்கள், இலங்கைப் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தனர்.
இலங்கை கடற்பரப்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சிதைவுகளை அகற்றும் பணியை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் வலியுறுத்திய நிலையில் இதற்கும் காப்புறுதி உரிமையாளர் தரப்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளது.
Express Pearl கப்பல் விபத்தினால் இலங்கை கடல் சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு கப்பலின் உரிமையாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினர் சாதகமான பதில்களை வழங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இது தொடர்பில் மேலும் கலந்துரையாட அவர்கள் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கம், சிங்கப்பூரில் ஏற்கனவே ஆரம்பித்துள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு, இந்தப் பேச்சுக்கள் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.