free website hit counter

12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சியால் இதுவரை 48,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அந்த மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்கால வரலாற்றில் உடவலவ நீர்த்தேக்கத்தில் மிகக்குறைந்த நீர்மட்டம் பதிவாகியுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை நிலவரப்படி, உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் மொத்த நீர் கொள்ளளவில் 0.45 வீதமாக காணப்பட்டது.

மகாவலி வளவ பிரதேசத்தில் 20 வருடங்களின் பின்னர் மிக மோசமான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், உடவலவ நீர்த்தேக்கத்தில் நீர் வற்றிப்போனதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.

217,800 ஏக்கர் அடி மொத்த நீர் கொள்ளளவைக் கொண்ட உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு இன்று காலை நிலவரப்படி 956 ஏக்கர் அடியாக குறைந்துள்ளது.

இது நீர்த்தேக்கத்தின் மொத்த நீர் கொள்ளளவில் 0.45% மதிப்பாகும்.

சாதாரண நிலைமைகளின் கீழ் உடவலவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்காக ஒரு நாளில் நொடிக்கு 3,200 ஏக்கர் அடி கொள்ளளவு நீர் திறந்துவிடப்பட்ட போதிலும் நேற்று 934 ஏக்கர் அடி நீர் கொள்ளளவு மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வலது கால்வாயில் இருந்து 521 ஏக்கர் அடி தண்ணீரும், இடது கால்வாயில் இருந்து 413 ஏக்கர் அடி தண்ணீரும் விவசாய நிலங்களுக்கு சென்றது.

அத்துடன், நேற்று சமனல குளம் மற்றும் வெலி ஓயா ஆகியவற்றிலிருந்து பாய்ந்த 545 ஏக்கர் அடி நீர் கொள்ளளவு உடவலவ நீர்த்தேக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

உடவலவ நீர்த்தேக்கத்தின் வினைத்திறன்மிக்க நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் அண்மைக்கால வரலாற்றில் மிகக் குறைந்த மட்டம் பதிவாகியுள்ளதாக அந்த அதிகார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நீர் வற்றியுள்ள உடவலவ நீர்த்தேக்கத்தை பார்வையிட பெருமளவான மக்கள் வருகின்றனர்.

எவ்வாறாயினும், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாலும், யானை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாலும் மக்கள் அப்பகுதிக்கு செல்வது ஆபத்தானது என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

மேலும், நீர் வற்றிய பகுதிகளில் வண்டல் மண் படிந்திருப்பதாலும், நீர்த்தேக்கத்தை அண்மித்த முதலைகளின் நடமாட்டம் இருப்பதாலும், அந்த பகுதி ஆபத்தானது என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இதேவேளை, உடவலவ நீர்த்தேக்கத்திலிருந்து விளைநிலங்களுக்கு போதியளவு நீர் பாய்ச்சப்படாததால் சுமார் 800 ஹெக்டேயர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக மகாவலி அதிகார சபையின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதலாக பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த 100 ஹெக்டேர் விவசாய நிலங்களும் தண்ணீரின்றி நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தமது விவசாயத்தை காப்பாற்றும் நோக்கில் சமனல குளத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு போதிய நீரைத் திறந்து விடுமாறு விவசாயிகள் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 15ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இதற்கிடையில், விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்குத் தேவையான தண்ணீரை அரசாங்கம் வழங்காதது தேசத் துரோகச் செயலாகக் குற்றம் சாட்டி மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula