இணையத்தளமொன்றில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொலை செய்ய நாட்டின் அரசியல் கட்சி ஒன்றைச் சேர்ந்த குழுவொன்று வெளிநாட்டில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக இன்றைய தினம் தனியார் வானொலி ஒன்றின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு வார காலத்திற்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அவ்வாறான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லைஎனவும் ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எந்தவொரு விசாரணைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.