இலங்கயின் 9வது ஜனாதிபதி பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க 57,40,179 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து அவர் விடுத்த செய்தியில், “நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது. இந்த வெற்றிக்காக நாம் மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் ரத்தம், கண்ணீர், வியர்வை மற்றும் தங்கள் உயிரையும்கூடத் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் இந்தத் தியாகங்கள் வீண்போகவில்லை. அவர்களின் தியாகங்கள் வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும். இந்த நிலத்திற்குப் புதிய தொடக்கம் தேவை. சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமை, புதிய யுகத்தின் தொடக்கமாக மறுமலர்ச்சி தோன்றும். வாருங்கள், எல்லோரும் இதற்காகக் கைகோர்ப்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் எனவும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் நடப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கையில், கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க நாளை காலை 9 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் புதிய ஜனாதிபதியாகச் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள அநுரவிற்கு பல தலைவர்களும் வாழ்த்துச்செய்திகளை அனுப்பி வருகின்றனர். வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கையின் புதிய அதிபரை மார்க்ஸிட் தலைவர் எனத் தவறாது குறிப்பிடுகின்றன.