இலங்கையில் பரவலாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 28,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு பகுதியில் குறைந்த தாழமுக்கம் உருவாகியுள்ளதாக கூறிய வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு கடற்கரை வழியாக தமிழகம் நோக்கி நகரும் என தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக நேற்றிரவு முதல் இலங்கையில் கடும் மழை பெய்து வருகிறது.
மழையுடன் கூடிய காலநிலையால் நாட்டில் 15 மாவட்டங்களில் 1836 குடும்பங்களைச் சேர்ந்த 7,167 பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, முல்லைத்தீவு, கொழும்பு, திருகோணமலை, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அனுராதபுரம், யாழ்ப்பாணம், காலி மற்றும் கேகாலை மாவட்டங்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பலர் உயிரிழந்திருந்தனர்.
இதேவேளை மஹா ஓயாவின் தாழ்வான பகுதிகளில் கடும் மழை பெய்ததை அடுத்து, பாரிய வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, அலவ்வ, திவுலபிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள மஹா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பாரிய வெள்ள நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கற்பிட்டி – பாலாவி பகுதியில் பலத்த மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கிய 71 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.