“கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்குள் அடியார்கள் வருவதற்கு அனுமதி கிடையாது. ஆகையினால் அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்.” என்று யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் லலித் லியனகே மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளமையினால், ஆலயங்களில் திருவிழாக்கள் நடாத்துவது தொடர்பாக சுகாதார அமைச்சினால் சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த சுற்று நிரூபங்களுக்கு அமைவாக யாழ்ப்பாண மாநகரசபை, ஆலய நிர்வாகம் மற்றும் பொலிஸார் இணைந்து ஆலய உற்சவத்தினை பாதுகாப்பாக எவ்வாறு நடாத்துவது என்பது தொடர்பில் கலந்தாலோசித்து, சில தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
குறித்த தீர்மானத்துக்கமைய நல்லூர் ஆலய வளாகத்திற்குள் ஆலய நிர்வாகத்தினரால் அடையாள அட்டை வழங்கப்பட்டோர் மாத்திரம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வேறு எவரும் ஆலய வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஆகவே பொதுமக்கள் தற்போதுள்ள தொற்று நிலைமையினை கருத்திற் கொண்டு, ஆலயத்துக்கு வருவதை தவிர்த்து கொள்ளுங்கள்.மேலும் வீடுகளில் இருந்தவாறு நேரடியாக ஒளிபரப்பப்படும் ஆலய உற்சவத்தை தரிசியுங்கள்.” என்றுள்ளார்.