உலகிலேயே மிகவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியத்தின் பிரதானமான சேவை வழங்கும் நிலையமாக கொழும்புத் துறைமுக நகரத்தை மாற்றியமைப்பதே இலக்காகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்புத் துறைமுக நகரத்தினால் வழங்கப்படும் தனித்துவமான வாய்ப்புக்களையும் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அங்கு முதலீடு செய்வதற்கு முன்வருமாறும் அனைத்து உலகத் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை முதலீட்டுப் பேரவையின் 2021ஆம் ஆண்டிற்கான மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நேற்று, இன்று, நாளை (7,8,9 ஆம் திகதிகளில்) நடைபெறும் இந்த இணையவழி மாநாட்டில் உலகளாவிய ரீதியில் 65 நாடுகள் கலந்துகொள்கின்றன. இந்த மாநாடு இலங்கை முதலீட்டுச்சபை, இலங்கை வர்த்தகப் பேரவை மற்றும் கொழும்புப் பங்குச்சந்தை ஆகியவற்றினால் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாநாட்டை இணையவழியில் ஆரம்பித்து வைத்து, உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,
“இலங்கையினால் பல்வேறு துறைகள் சார்ந்தும் வழங்கப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தக்கூடிய முக்கிய நிகழ்வாக இந்த மாநாடு அமையும். இந்த மாநாட்டின் மூலம் இலங்கை முதலீட்டுச்சபை, இலங்கை வர்த்தகப் பேரவை, கொழும்புப் பங்குச் சந்தை ஆகியவை மாத்திரமன்றி, முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தக சமூகத்தினர் என அனைவரும் ஒன்றிணைந்திருக்கின்றார்கள். இது எமது பொருளாதாரத்தின் முதலீட்டு நிலைவரம் தொடர்பான கலந்துரையாடல்களை ஏற்படுத்துவதற்கும் முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காண்பதற்கும் வழிவகுக்கும். அது மாத்திரமன்றி மூலதனச்சந்தை மற்றும் கடன்சந்தை ஆகியவை தொடர்பில் ஆராய்வதற்கும் வாய்ப்பேற்படுத்தும்.
இலங்கைக்கு மிகவும் அவசியமானதும் பொருத்தமானதுமான சந்தர்ப்பத்திலேயே இந்த முதலீட்டு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
ஏனெனில் 2030ஆம் ஆண்டாகும் போது இலங்கை தற்போதைய அதன் வருமானத்தை விடவும் இருமடங்கு வருமானத்தைப் பெறுவதற்கும் பொருளாதார ரீதியில் புதியதொரு மறுசீரமைப்பை அடைந்து கொள்வதற்கும் அவசியமான செயற்றிட்டங்களையும் யோசனைகளையும் எனது அரசாங்கம் கொண்டிருக்கிறது.
எமது நாட்டின் தனித்துவமான கேந்திர முக்கியத்துவமுடைய அமைவிடம், அரசியல் உறுதிப்பாடு, வலுவான சமுதாயக்கட்டமைப்பு, அறிவுடையதும் செயற்திறன் வாய்ந்ததுமான தொழிற்படை மற்றும் உயர் வாழ்க்கைத்தரம் ஆகியவை தற்போதைய இலங்கையின் சக்திவாய்ந்த கூறுகளாகும். எனவே பொருளாதார மேம்பாடு தொடர்பான எமது எதிர்கால இலக்குகளை அடைந்துகொள்வதற்கு இந்த அடிப்படைக் கூறுகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
அதுமாத்திரமன்றி நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளில் தொடர்ச்சியாக முன்னேற்றகரமான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கத்தக்க சக்திவளங்கள் மூலமான சக்திவலு உள்ளீர்ப்பை அதிகரித்தல், வீதி மற்றும் புகையிரதப் பாதை மறுசீரமைப்புக்கள், நாட்டின் துறைமுகங்களை மேலும் விஸ்தரித்தல் ஆகியவையும் இதில் உள்ளடங்குகின்றன.
நிலையான நுண்பாகப் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் நிலைபேறானதும் வலுவானதுமான கொள்கைகளைப் பேணுவதற்கான உறுதிப்பாட்டை நாம் கொண்டிருக்கின்றோம். அதேவேளை முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்கு உதவும் வகையில் எமது சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் செயற்றிட்டங்கள் வகுக்கப்படும்.
இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் முதலீட்டுக்கு ஏற்றவகையிலான இந்த மாற்றங்கள் இடம்பெறுவதைப் பார்ப்பதற்கு விரும்புகின்றேன். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குப் பெருமளவான வருமானத்தைப் பெற்றுத்தரக்கூடிய வகையிலான பல்வேறு முதலீட்டு வாய்ப்புக்கள் இலங்கையின் பல்துறைசார் பொருளாதாரத்தில் காணப்படுகின்றன.
உலகின் முன்னணிப் பொருளாதார மத்திய நிலையங்களுக்குச் செல்வதற்கு சிலமணிநேர ஆகாய மார்க்கப் பயணம் போதும் எனும் அளவிலான தூரத்திலேயே இலங்கையின் அமைவிடம் உள்ளது. அதுமாத்திரமன்றி தெற்காசியப் பிராந்திய நாடுகள் அனைத்துடனும் நெருக்கமான பிணைப்பைக் கொண்ட நாடாகவும் இலங்கை இருக்கின்றது.
மேலும் இலங்கையின் வர்த்தகத் தலைநகரமாக விளங்கும் கொழும்பு, இப்பிராந்தியத்திலேயே குறிப்பிட்டுக் கூறத்தக்க வகையிலான முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது. இந்த நகரத்தில் காணப்படும் பல்வேறு துறைசார் வாய்ப்புக்களும் கொழும்புத் துறைமுக நகரத்தின் ஊடாக வெகுவிரைவில் மேலும் விஸ்தரிக்கப்படும். உலகிலேயே மிகவேகமான வளர்ச்சியடைந்து வருகின்ற இந்தப் பிராந்தியத்தின் பிரதானமான சேவை வழங்கும் மத்திய நிலையமாகத் துறைமுகநகரத்தை மாற்றியமைப்பதே எமது இலக்காகும்.” என்றுள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    