எம்.பி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றிய விவகாரத்தில் அரசாங்கம் அசண்டையீனமாக செயற்பட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘பேர்ள் கப்பலை கொழும்பு துறைமுகத்துக்குள் அனுமதித்திருந்தால், அதிலிருந்த ஏற்பட்ட வெடிப்புகளால், ஷங்ரிலா ஹோட்டல் வரையான அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாகியிருக்கும். கப்பல் தீப்பற்றிய 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதிக்குள் சட்டத்தை ஏன்? செயற்படுத்தவில்லை?’ என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, “அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் தேசிய சபையை கூட்டி, அனர்த்த நிலைமைய பிரகடனப்படுத்தியிருக்கலாம். ஜனாதிபதி, பிரதமர், 20 அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவருடன், இச் சபையை கூட்டி, அடுத்த தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும், ஆனால், அந்த தீர்மானம் எடுக்கப்படவில்லை.
அவ்வாறு கூடி முடிவெடுத்து, தேசிய அனர்த்த நிலைமை அறிவித்திருந்தால், அதனூடாக வெளிநாடுகளிலிலிருந்து நிவாரணங்களை பெற்றிருக்கலாம். ஆனால் இந்தியாவிலிருந்து மாத்திரமே நாம் உதவி பெற்றோம். அதுவும் போதுமானளவு இருக்கவில்லை. ஆனாலும், இது தொடர்பான மேலதிக தெளிவு ஐரோப்பிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கே உள்ளன.
இதன் பாதிப்பை மட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் அதற்கான நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்பது தொடர்பாக பிரச்சினையுள்ளது. இதனால் எமது பொருளாதாரம் சுற்றாடல் பாதிப்பு குறித்த சிந்திக்க வேண்டும். நைட்ரிக் இரசாயனம் கடலில் கலப்பதால் கொழும்பு கடல் பிரதேசத்திலுள்ள முருங்கைக்கற் பாறைகள் அழிவடையலாம். இந்தப் பாறைகளால் தான் சுனாமியிலிருந்து எமது நாடு தப்பியது. அந்த பாதுகாப்பு இப்போது இல்லை.
எனவே இந்தவாரம் பாராளுமன்றம் கூடியவுடன், தெரிவுக்குழுவை நியமித்து, ஜூலை மாதம் முதலாம் வாரம் இது தொடர்பான அறிக்கையை முன்வைக்கும் யோசனையை முன்வைக்கும் உரிமை பாராளுமன்றத்துக்கு உள்ளது.” என்றுள்ளார்.