கொழும்பு துறைமுக நகரச் சட்டம் நாட்டின் இறைமைக்கு பாரிய அடி என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
யுத்தத்திலிருந்து நாடு சுதந்திரமடைந்ததை முதல் நாள் கொண்டாடியவர்கள், அடுத்த நாளே நாட்டைக் காட்டிக்கொடுக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“1815ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்தை விடவும் மிகப் பெரியதொரு காட்டிக்கொடுப்பே கொழும்புத் துறைமுக நகரச் சட்டமூலமாகும். இச்சட்டமூலத்துக்கான திருத்தங்களை வழங்குவதால், அதனை நாங்கள் ஆதரிப்பதாக அர்த்தப்பட மாட்டாது. இச்சட்டமூலமானது, இந்நாட்டின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி, அரசியல் சுதந்திரம் ஆகியவற்றுப்பெரும் அச்சுறுத்தலாகவும், மரண அடியாகவும் அமைந்துள்ளது.” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெற்ற கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் என்பது, நூதனமான முறையில் வார்த்தைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தேசத்துரோகச் செயற்பாடாகும்.
கடந்த 11ஆம் திகதியிலிருந்து இதுவரையில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் பாரியளவில் அதிகரித்துள்ளதோடு, தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது. நாடு இவ்வாறான நிலையில் இருக்க, பாராளுமன்றத்தை இரு நாட்கள் கூட்ட வேண்டுமா?” கடந்த வருடம் ஓகஸ்ட் முதல், இந்த அரசாங்கம் தேங்காய் துருவிக்கொண்டிருந்ததா? அக்காலப்பகுதியில் ஏன் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை?
துறைமுக நகரம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்துவதால், நாடு கொரோனாவிலிருந்து மீண்டெழுமா, நாட்டு மக்கள் இதனால் மகிழ்வார்களா? பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னர் கூறியது போல, “தென் சத்துட்டுய்த, செபத?” (இப்போது மகிழ்ச்சியா, திருப்தியா?) என இப்போது கேட்க முடியுமா? இச்சட்டமூலத்தை வெளிநாட்டு நிறுவனமொன்றின் சட்டத்தரணி ஒருவரே தயாரித்துள்ளார். இது, இந்நாட்டின் அரசியலமைப்பை 26 தடவைகள் மீறியுள்ளது.
கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி நாடகமாடாது. பட்டர் பூசும் அரசியல் எங்களிடமில்லை. இதனை நாம் எதிர்க்கிறோம். இச்சட்டமூலத்தால், இலங்கைப் பிரஜைகள், மூன்றாம் நபர்களாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே சட்டம் இப்போது எங்கே போயுள்ளது? மூன்றிலிரண்டுப் பெரும்பான்மை இருப்பதால், தமக்கு வேண்டியவாறு அரசாங்கம் செயற்பட முடியுமா? இச்சட்டமூல வாக்கெடுப்பின் போது, யார் தேசாபிமானிகள் என்பது தெரியவரும்” என்றுள்ளார்.