"முதலில், வெற்றிபெற எல்லாவற்றையும் செய்த ஸ்பெயினுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அதேவேளை இன்றைய மாலையில் அபாரமாக விளையாடிய எமது அணி வீரர்களையிட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்றார் பெட்கோவிக்.
போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் மாநாட்டில், சுவிஸ் காற்பந்து அணியின் பயிற்சியாளர் விளாடோ பெட்கோவிக் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், போட்டியில் நாம் தோற்றிருக்கலாம். ஆனால் ஆடுகளத்தில் எமது அணி வீரர்கள் சிறப்பாக முன்னேறியுள்ளார்கள். உண்மையான ஹீரோக்களாக இருந்த அவர்களையிட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த மாலை துரதிர்ஷ்டவசமாக, நம்மை பாதித்தது. ஆனால் நாங்கள் தேர்ச்சி பெற தகுதியுடையவர்கள் என்பதை ஆட்டத்தில் என் பிள்ளைகள் நிரூபித்தார்கள்" என தோல்வியில் துவளாது, தமது அணியைப் பெருமைப்படுத்தும் ஒரு தந்தை போலப் பதிலளித்தார்.
"இத்தாலியுடனான போட்டிக்குப் பிறகு நாங்கள் சிறப்பாக எம்மை வளர்த்தெடுத்தோம். கடந்த மூன்று பந்தயங்களில் வலுவான எதிரிகளுக்கு எதிராக விளையாடுவதையும், ஒரு அணியாக நாங்கள் அனைவருடனும் ஒரு சிறந்த வழியில் விளையாட்டை வெல்ல முயற்சிக்கிறோம். " எனக் கூறி அவர் தனது செவ்வியினை நிறைவு செய்தார்.
'ஈரோ 2020 ' போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றில், உலகின் சிறந்த காற்பந்து அணிகளில் ஒன்றான, ஸ்பெயின் அணியினை, சுவிற்சர்லாந்து அணி, நேற்றைய மாலையில், ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள கிரெஸ்டோவ்ஸ்கி தீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள, காஸ்ப்ரோம் அரினா என அழைக்கப்படும் க்ரெஸ்டோவ்ஸ்கி ஸ்டேடியத்தில் எதிர் கொண்டது.
ஆட்டத்தின் முதல் பத்து நிமிடத்துக்குள்ளாகவே ஸ்பானியா முதலாவது கோலைப் போட்டிருந்தாலும், சுவிஸ் அணி கடுமையாகப் போராடி, 68 வது நிமிடத்தில் தனது பங்கிற்கான முதலாவது கோலை போட்டது. அடுத்த பத்து நிமிடத்திற்குள்ளாகவே சுவிஸ் அணியின் வீரர் ஃபிரூலர் சிகப்பு அட்டை பெற்று ஆடுகளத்திலிருந்து வெளியேறினார்.
இறுதியில் ஒன்றுக்கு ஒன்று எனும் சமநிலைப் புள்ளியில் ஆட்டம் நிறைவு பெற, பெனால்டி முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதன் போது, 1: 3 எனும் புள்ளியில் ஸ்பெயின் சுவிற்சர்லாந்தை வெற்றி கொண்டது.
நேற்று நடைபெற்ற மற்றுமொரு காலிறுதிப் போட்டியில், பெல்ஜியத்தை எதிர் கொண்ட இத்தாலிய அணி, 1: 2 எனும் புள்ளி விகிதத்தில் வெற்றி கண்டது. வெற்றி பெற்றுள்ள, ஸ்பானியா மற்றும் இத்தாலிய அணிகள், வரும் செவ்வாய் இரவு இலண்டன் வெம்பிளி மைதானத்தில் அரையிறுதிப் போட்டிக்காக மோதவுள்ளன. 11.07.2021 அதே மைதானத்தில் 'ஈரோ-2020' போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.