ஐரோப்பிய வெற்றிக் கிண்ணத்திற்கான (UEFA Euro+2020) கால்பந்தாட்டப் போட்டித் தொடரின், 15 வது போட்டி இன்று இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது. இதில் A குழுநிலையில் இரண்டாவது போட்டிக்காக, இத்தாலி, சுவிஸ் அணிகள் மோதிக்கொண்டன.
இத்தாலிய அணியின் வலுவான ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில், 3:0 எனும் கோல் கணக்கில் சுவிஸ் அணி, தோல்வியைத் தழுவிக் கொண்டது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் இரு அணிகளும் உற்சாகமாகத் தொடங்கியள போதும், அரை மணிநேர ஆட்டத்தின் பின்னர் சுவிஸ் அணியின் ஆட்டம் தளர்வுற்றது.
மொத்த ஆட்ட நேரத்தில், கனிசமான பகுதியில் மிக மோசமான ஆட்டத்தை ஆடிய சுவிஸ் அணியை எதிர் கொண்ட இத்தாலிய அணி தனது முதலாவது கோலை 26 நிமிடத்திலும், 52 நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடித்தது. இந்த இரு கோல்களையும் லாவமான வெற்றிப் பந்துகளாக அடித்த இத்தாலிய அணியின் வீரர் லோக்கத்தெல்லி, ஆட்ட நாயகனாக மிளிர்ந்தார். ஆட்டத்தின் நிறைவுக்குச் சற்று முன் 89 வது நிமிடத்தில் எதிர்பாரா வண்ணம் மூன்றாவது வெற்றிக் கோலை அடித்தார் இத்தாலிய சீரோ இம்மோபிலே.
ஆட்ட நேரம் முழுவதுமே இத்தாலிய அணி அபாரமாக விளையாடியது , சுவிஸ் அணி அதற்கு ஈடுகொடுத்து ஆட முடியாதிருந்தது. ஆனாலும் இத்தாலிய அணியை விட அதிகமாக பந்துகளை சுவிஸ் அணி கடத்தியிருந்த போதும், அவற்றை வெற்றிப் பந்துகளாக மாற்றத் தவறி, மோசமான தோல்வியினைச் சந்தித்தது.
இதனால் தற்போது அணிகளுக்கிடையிலான புள்ளி விபரத்தில், இத்தாலி முழு புள்ளிகளுடனும் (6 புள்ளிகள்), வேல்ஸ் (4), சுவிட்சர்லாந்து (1) மற்றும் துருக்கி (0) எனும் நிலையிலும் காணப்படுகின்றது.
மூன்றாவது குழுநிலையின் ஏ போட்டிக்காக ஜூன் 20 ஞாயிற்றுக்கிழமை துருக்கிக்கு எதிராக சுவிஸ் அணி விளையாடும்.