T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி
20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றினை இரண்டு வெற்றிகளுடன் நிறைவு செய்ய, மேற்கிந்திய தீவுகள் அணி சுபர் 12 சுற்றில் மூன்று தோல்விகளைப் பெற்று T20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறும் வாய்ப்பினை தமக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் இழக்கின்றது.
T20 உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பினை ஏற்கனவே இழந்த இலங்கை அணி சுபர் 12 சுற்றின் குழு 1 இல் தமது கடைசி குழுநிலைப் போட்டியாக மேற்கிந்திய தீவுகளை எதிர்கொண்டிருந்தது. அபுதாபியில் தொடங்கிய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கீரோன் பொலார்ட் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் அணி தமது கடைசி குழுநிலைப் போட்டியில் ஆறுதல் வெற்றியொன்றினைப் எதிர்பார்த்து களமிறங்க, மேற்கிந்திய தீவுகள் தமது அரையிறுதி வாய்ப்பினை தக்கவைக்க கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து இலங்கை வீரர்களுடனான சவாலில் களம் கண்டிருந்தது.
இப்போட்டிக்கான இலங்கை அணி வேகப் பந்துவீச்சாளர் லஹிரு குமாரவிற்குப் பதிலாக பினுர பெர்னாண்டோவிற்கு வாய்ப்பு வழங்கியிருக்க, மேற்கிந்திய தீவுகள் தமது கடைசிப் போட்டியில் ஆடிய அதே அணியினை இலங்கைக்கு எதிராகவும் களமிறக்கியிருந்தது.
தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு குசல் ஜனித் பெரேரா மற்றும் பத்தும் நிஸங்க ஜோடி சிறந்த ஆரம்பத்தினை வழங்கியது. இந்நிலையில் இலங்கை அணி 42 ஓட்டங்கள் பெற்ற நிலையில் இலங்கையின் முதல் விக்கெட்டாக அன்ட்ரூ ரசலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த குசல் பெரேரா 21 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.
இதன் பின்னர் இரண்டாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலன்க ஆகியோர் 91 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து இலங்கை அணியினை வலுப்படுத்தினர்.
இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த பெதும் நிஸ்ஸங்க இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் தான் பெற்ற இரண்டாவது அரைச்சதத்துடன் 41 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றார்.
அதனை அடுத்து சரித் அசலன்க, அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோரின் அதிரடியுடன் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
சரித் அசலன்க இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய இரண்டாவது T20I அரைச்சதத்துடன், 41 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களை எடுத்ததோடு, இந்த T20 உலகக் கிண்ணத்தில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராகவும் மாறினார். மறுமுனையில் தசுன் ஷானக்க 14 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பில், அன்ட்ரூ ரசல் 2 விக்கெட்டுக்களையும், டுவெய்ன் பிராவோ ஒரு விக்கெட்டினையும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 190 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்கத்திலேயே பினுர பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களைச் சாய்த்து அழுத்தம் வழங்கினார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு கட்டத்தில் தமது முன்வரிசை வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஈவின் லூயிஸ் ஆகியோரினை ஓய்வறை அனுப்பிய நிலையில் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றம் காண்பித்தது.
எனினும் இந்த தருணத்தில் அணியினை வலுப்படுத்திய நிகோலஸ் பூரன் தனது தரப்பினை சரிவிலிருந்து மீட்க முயற்சி செய்தார். எனினும், அவரின் விக்கெட் துஷ்மந்த சமீரவின் பந்துவீச்சில் பறிபோனது. நிகோலஸ் பூரன் 34 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 46 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் விக்கெட்டை பறிகொடுத்திருந்தார்.
நிகோலஸ் பூரனினை அடுத்து இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களான சாமிக்க கருணாரட்ன மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த போதும், சிம்ரோன் ஹெட்மேயர் T20 சர்வதேசப் போட்டிகளில் தனது சிறந்த இன்னிங்ஸ் உடன் அணிக்காக போராட்டம் காண்பிக்கத் தொடங்கினார்.
பின்னர் ஹேட்மேயரின் போராட்டமும் வீணாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை போராட்டம் காட்டிய சிம்ரொன் ஹேட்மேயர் 54 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 81 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் காணப்பட்டிருந்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் சாமிக்க கருணாரட்ன, பினுர பெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் சார்பில் சரித் அசலன்க தெரிவாகினார்.
இப்போட்டியோடு இலங்கை அணி T20 உலகக் கிண்ணத்தினை நிறைவு செய்து நாடு திரும்ப, மேற்கிந்திய தீவுகள் தமது கடைசி குழுநிலைப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினை எதிர்வரும் சனிக்கிழமை (06) எதிர்கொள்கின்றது.