லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் இரண்டாவது பருவகாலத்திற்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியினுடைய முன்னணி வீரர்கள் சிலர் எந்த அணிகளினாலும் ஏலம் எடுக்கப்படாததனை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அது தொடர்பிலான ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இரண்டாவது பருவகாலத்திற்கான LPL தொடரின் வீரர்கள் ஏலத்தில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா போன்ற வீரர்கள் அடங்கலாக சிரேஷ்ட வீரர்களின் தொகுதியொன்று எந்த அணிகளாலும் கொள்வனவு செய்யப்பட்டிருக்கவில்லை.
இதன் பின்னர் LPL தொடரின் வீரர்கள் ஏலம் குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்திருந்ததோடு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன உள்ளடங்கலாக பலரும் இந்த வீரர்கள் ஏலத்தினை விமர்சித்திருந்தனர்.
எனினும் இந்த வீரர்கள் ஏலம் குறித்து ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை, வெளிப்படையான முறையில் வீரர்கள் ஏலம் பற்றி தொடரில் ஆடுகின்ற அணியின் உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதாக குறிப்பிட்டிருக்கின்றது.
இன்னும் இலங்கை கிரிக்கெட் சபை, LPL தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கும் அணிகள் இலங்கை கிரிக்கெட் சபை வழங்கிய விதிமுறைகளுக்கு அமையவும், குறித்த அணிகளுக்கு வீரர்களை தெரிவு செய்வதற்கு காணப்படுகின்ற விருப்புரிமைக்கும் அமையவுமே தமது அணிகளுக்கான 20 வீரர்களையும் தெரிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.
அதோடு LPL தொடரின் வீரர்கள் ஏலம் வெளிப்படையாக நடைபெற்றிருக்கின்றது என்பதனை மேலும் உறுதிப்படுத்தியிருந்த இலங்கை கிரிக்கெட் சபை, LPL தொடரின் வீரர்கள் ஏலத்தில் இம்முறை தெரிவாகாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் தொடரில் பங்கெடுக்கும் அணிகளுக்கு தமது வீரர்கள் குழாத்தினுள் உள்வாங்கும் வீரர்களின் மொத்த எண்ணிக்கையினை 20 இல் இருந்து 22 ஆக அதிகரிக்கவுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றது.
அதேநேரம் கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டுக்கான LPL தொடரினையும் வெற்றிகரமாக நடாத்த உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, அதற்குரிய முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றது.
இதேநேரம் இலங்கை கிரிக்கெட் சபையின் அறிவிப்போடு LPL தொடரில் பங்கெடுக்கும் அணிகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.