இலங்கை - பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெற்றது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. திமுத் கருணாரத்னே 80 ரன்கள் எடுத்த நிலையில் சாகிப் அல் ஹசன் பந்தில் போல்டானார். அவரை தொடர்ந்து மெண்டிஸ் 11 ரன்களில் வெளியேற ராஜிதா டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். பின்னர் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் டி சில்வா ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அற்புதமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டி சில்வா அவுட்டானார். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இலங்கை அணியின் மேத்யூஸ் ,தினேஷ் சண்டிமால் சிறப்பாக விளையாடினர் .நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர் .இருவரின் விக்கெட் எடுக்க முடியாமல் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாறினர் . அபாரமாக விளையாடிய மேத்யூஸ் சதம் அடித்து அசத்தினார் .தொடர்ந்து தினேஷ் சண்டிமாலும் சதம் அடித்தார். சிறப்பாக விளையாடிய சண்டிமால் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்க்சில் 10 விக்கெட்டுக்களை இழந்து 506 ரன்கள் குவித்தது .அந்த அணியின் மேத்யூஸ் 145 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் .
இதனை தொடர்ந்து தனது 2வது இன்னிங்க்சில் விளையாடிய பங்களாதேஷ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுக்களை இழந்தது .4வது ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் எடுத்தது .அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம் 14 ரன்களிலும் ,லிட்டன் தாஸ் 1 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இன்று 5வது நாள் ஆட்டம் தொடங்கியது. முஷ்பிகுர் ரஹிம் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அபாரமாக விளையாடிய லிட்டன் தாஸ் அரை சதம் அடித்து 52 ரன்களில் ,ஷாகிப் அல் ஹசன் அரைசதம் அடித்து 58ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதனால் பங்களாதேஷ் அணி 169 ரன்களுக்கு 10 விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
இதனால் இலங்கை அணிக்கு 29 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை இலங்கை விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது.
போட்டியின் ஆட்ட நாயகனாக அசித பெர்னாண்டோவும், தொடர் நாயகனாக அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவாகினார்.