free website hit counter

மில்லர்,பாண்டியா அதிரடி - ராஜஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குஜராத்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 2 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்களை குவித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 47 ரன்கள் எடுத்தார்.  

குஜராத் சார்பில் ஷமி, யாஷ் தயாள், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா 2வது பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து ஷுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. ஷுப்மான் கில் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து வேட் 35 ரன்னில் வெளியேறினர்.

அதை தொடர்ந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா - டேவிட் மில்லர் அதிரடியாகவும் அதே நேரத்தில் பொறுப்பாகவும் விளையாடினர்.

கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் பாண்டியா - டேவிட் மில்லர் ஜோடி களத்தில் இருக்க இறுதி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பிரசித் கிருஷ்ணா வீச முதல் பந்தில் மில்லர் சிக்சர் விளாசினார். அதை தொடர்ந்து 2-வது பந்திலும் மில்லர் சிக்சர் விளாச குஜராத் அணியின் வெற்றி உறுதியானது. 3-வது பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட்ட மில்லர் குஜராத் அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார்.

3 பந்துகள் மீதம் இருக்க 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மில்லர் 38 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula