சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறுவதாக அயர்லாந்து கிரிக்கெட் அணியின் கெவின் ஓ பிரையன் அறிவித்துள்ளார். ஆல்-ரவுண்டரான அவர் அயர்லாந்து கிரிக்கெட் வளர்ச்சியில் பங்காற்றிய முக்கிய வீரர் ஆவர்.
ஒருநாள் போட்டியில் 114 விக்கெட்டும், 20 ஓவர் போட்டியில் 58 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இவர் உள்ளார். கடந்த 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் சதம் பதிவு செய்திருந்தார் கெவின். அது இன்றுவரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட அதிவேக சதமாக ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 50 பந்துகளில் சதம் விளாசி இருந்தார். அதோடு அந்தப் போட்டியில் அயர்லாந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
அயர்லாந்து அணிக்காக விளையாடி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலராகவும் உள்ளார். 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 114 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேனும் கெவின்தான். டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் விளாசிய அயர்லாந்து வீரர் என்ற சாதனையை வைத்துள்ளவர்.
மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அசோசியேட் உறுப்பினராக இருந்த அயர்லாந்து அணி கடந்த 2017 இல் டெஸ்ட் கிரிக்கெட் அணி என்ற அந்தஸ்தை பெற்றது. அந்த வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.
இந்த நிலையில், 38 வயதான கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக நேற்று அறிவித்தார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில்,
"எனது 16 ஆண்டு கால பயணத்துக்கு பிறகு இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் எனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்பினேன். ஆனால் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு நான் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
அணி நிர்வாகம் வேறு திட்டத்தை வைத்து இருப்பதாக உணருகிறேன். நாட்டுக்காக களம் கண்ட ஒவ்வொரு வினாடியையும் உற்சாகமாக அனுபவித்து விளையாடினேன். எனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர இது சரியான தருணமாகும். எனக்கு சொந்தமான பயிற்சி அகாடமியை தொடர்ந்து மேம்படுத்த ஆசைப்படுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.