ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்றிரவு குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். எச்சரிக்கையுடன் தொடங்கிய இருவருக்கும் அதிர்ஷ்டம் கைகொடுத்தது. கில் 3 ரன்னில் இருந்த போது வழங்கிய மிக எளிதான கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்திய கில் சிக்சரும் பவுண்டரிகளுமாக தெறிக்க விட்டு அசத்தினார்.
ஆனால் 20 பந்துகளில் 39 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கால் கில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக விருத்திமான் சஹாவுடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியில் சஹா ஒரு பக்கம் அதிரடி காட்ட மறுபக்கம் சாய் சுதர்சன் களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். சாய் சுதர்சன் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச குஜராத் அணியின் ரன் வேகம் குறையாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
சகா 54 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சாய் சுதர்சனுடன் இணைந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்சன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 96 ரன்களில் அவுட் ஆனார். அவர் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டினார்.
20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். சிஎஸ்கே தரப்பில் பதீரனா 2 விக்கெட் எடுத்தார். தீபக் சாகர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.
இதனையடுத்து 215 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டிவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். ருதுராஜ் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தநிலையில், அங்கு மழை திடீரென குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சரியாக நள்ளிரவு 12.10 மணியளவில் சிஎஸ்கே பேட்டிங் செய்ய தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து போட்டி 15 ஒவர்களாக குறைக்கப்பட்டு சென்னை அணிக்கு 171 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனையடுத்து களத்தில் இருந்த ருதுராஜ் மற்றும் டிவான் கான்வே குஜராத் பந்துவீச்சை நொறுக்கத் தொடங்கினர். 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 74 ஓட்டங்கள் குவித்தனர்.
ஆனால் அடுத்த ஓவரில் நூர் அஹ்மத் பந்துவீச்சில் ருதுராஜ் மற்றும் கான்வே அடுத்தடுத்து வெளியேறினர். ருதுராஜ் 16 பந்துகளில் 26 ஓட்டங்களும் கான்வே 25 பந்துகளில் 47 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ரஹானே (27 ரன்), மாற்று வீரர் அம்பத்தி ராயுடு (19 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. கேப்டன் டோனி (0) ஏமாற்றம் அளித்தார்.
கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட ெடன்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார்.
இந்நிலையில், 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து சென்னை அணி அபார வெற்றி பெற்றது. ஷிவம் துபே 32 ரன்னுடனும், ஜடேஜா 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்வது இது 5-வது முறையாகும். இதன் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது.