அழகான அஜர்பைஜானின் பாகு ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் (Baku Olympic Stadium) இன்று நடைபெற்ற 'ஈரோ- 2020' காலிறுத்திப் போட்டியில், டென்மார்க் செக் குடியரசு அணிகள் மோதின.
ஆட்டம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே முதலாவது கோலை அடித்த டென்மார்க் அணி, ஆரம்பம் முதலே அழகாக ஆடியது. அந்த அணியின் ஒவ்வொரு பந்து கடத்தலும் சிறப்பாக நகர்ந்தது.
எதிர்த்து விளையாடிய செக் அணியும், அதற்குச் சற்றும் குறைவில்லாமலே விளையாடியது. ஆனாலும் அதிர்ஷ்டம் அந்த அணியின் பக்கம் இருக்கவில்லைப் போலும். அருமையான வெற்றிப் பந்து வாய்ப்புக்கள் யாவும் தவறிப் போயின. டென்மார்க் அணி கிடைத்த வாய்ப்பினையெல்லாம் வெற்றிப் பந்துகளாக்க முயன்றது. செக்கின் பந்து காப்பாளர் திறமையாக அவற்றை முறியடித்தார். ஆட்டத்தின் அரை இறுதியில் 2 கோல்களை டென்மார்க் அணி அடித்திருந்தது.
இடைவேளையின் பின்னதாக ஆட்டம் தொடங்கிய 5 வது நிமிடத்தில், செக் அணி தனது முதலாவது கோலை வெற்றிகரமாக இட்டது. ஆட்டம் முழுவதும் இரு அணிகளும் சமநிலையிலே விளையாடின. இரு அணிகளும் ஏறக் குறையச் சம அளவிலான பந்துக் கடத்தல்களை மேற் கொண்டிருந்த போதும் ஆட்டத்தில் அதிகளவு கோல்களுக்கான முயற்சிகளை செக் அணி மேற்கொண்டது. அவை அனைத்தையும் லாவகமாக தடுத்து விளையாடியது டென்மார்க் அணி.
டென்மார்க் வீரர்களின் ஓடுந்திறன் அவர்களது ஆட்டத்திற்கு பலமாக இருந்தது எனலாம். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் வெற்றிக்கான புள்ளியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, செக் அணி கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ளத் திணறியது டென்மார்க் அணி. ஆனாலும் இறுதி வரை மிகக் கடுமையான தடுப்பாட்டத்தை மேற்கொண்ட டென்மார்க் அணி, 1: 2 எனும் கோல்களின் அடிப்படையில் அரையிறுதிக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.