இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் அடுத்த ஆண்டு (2022) அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தொடரின் சுபர் 12 சுற்றுக்கு தெரிவாக முதல் சுற்றில் (First Round) பங்கெடுக்க வேண்டும்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் சமீபத்திய (நவம்பர் 15ஆம் திகதிக்குரிய) T20 அணிகள் தரவரிசையில் முறையே 09ஆம், 10ஆம் இடங்களைப் பெற்றிருப்பதனை தொடர்ந்தே, 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் விளையாட வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.
இதேநேரம் அடுத்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தொடரினை நடாத்தும் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் உள்ளடங்கலாக அண்மைய T20 அணிகள் தரவரிசையில் முதல் எட்டு இடங்களுக்குள் காணப்படும் அணிகள், 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் சுபர் 12 சுற்றுக்கு நேரடி தகுதியினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத்தொடரில் தாம் விளையாடிய சுபர் 12 சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்த போதும் அவர்கள் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய அணிகளுக்கு எதிராக பதிவு செய்த T20 தொடர் வெற்றிகள், அவர்களுக்கு 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் நேரடியாக விளையாடும் வாய்ப்பினை கொடுத்திருக்கின்றது.
பங்களாதேஷ் அணியுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் அணியும் 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தின் சுபர் 12 சுற்றில் விளையாட தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன
அதேநேரம் நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத்தின் சுபர் 12 சுற்றில் பங்கெடுத்துவரும் அணிகளான நமீபியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இரண்டும், 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுடன் முதல் சுற்றில் விளையாடும் ஏனைய இரண்டு அணிகளாக அமைகின்றன.
இதேநேரம் இலங்கை, மேற்கிந்திய தீவுகள், ஸ்கொட்லாந்து, நமீபியா தவிர 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தொடரின் முதல் சுற்றில் விளையாடவுள்ள ஏனைய நான்கு அணிகளும், T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் மூலம் தெரிவு செய்யப்படவிருக்கின்றன.