பதி என்று இறைவனை எல்லோரும் போற்றி வணங்குவர் .அனைத்து உயிர்களையும் படைத்து உயிர் கொடுத்து காத்து அகிலத்தை பரிபாலிப்பவரும் அதி பதியாக விளங்குபவரும் இறைவர் ஒருவரே அதனால் பதி என்கிறோம். இப்படி எவரையும் காக்கும் கடவுளை பக்தியுடன் வழி படவேண்டும்.
அதுபோல் தெய்வத்திற்கு ஈடாக கணவனை பதி என மனைவியர் வழிபாடாற்றுவர். அதுவே பதிபக்தியாகும்.
கண் எனும் உறுப்பு ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் தன் கணவனால் தாலி கட்டிய பெண்களுக்கு அவர்கள் கணவர் கண் போன்று மிகமுக்கியம். கண் அவன் கணவன் எனக்கொண்டாடுவர். அப்படி கணவனைக் கண்ணாக பாதுகாப்பாக காப்பாற்றுதல் மனைவினது தலையாய கடமையாகும். பெண்கள் கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவற்றைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டியதன் அவசியம் கணவன் மூலம் உணர்த்தப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவனாக வாய்க்கப்பெற்றவன் முதன்மை பெற்றவராய் இருப்பினும் இல்லாதவராயினும் மதித்து மனதில் இடமளித்து அவரவர்க்கு வாய்க்கப்பெற்ற கணவரிடம் தூய்மையான அன்பு கொண்டு வாழப்பழகிக்கொண்டால் இனிமையான வாழ்வு மலரும். கணவனுக்கு மதிப்பளித்து அவருக்கு பெண்ணானவள் கட்டுப்பட்டு வாழ்வை வளம் கொழிக்கச் செய்வது இல்லாளின் முக்கிய பணியாகும்.
திருவள்ளுவர் இல்லறம் என்பது அது நல்லறமாக திகழ மனைவி என்பவள் எப்படி இருக்கவேண்டும் என்று மிக அழகாகக் கூறுகிறார். கீழே குறள்
"இல்லாதென் இல்லவள் மான்பானால் உள்ளதென்
இல்லவள் மானாக் கடை"
குறளின் கருத்து என்னவெனில் வாழ்க்கைத்துணைவி நற்பண்புகளின் உறைவிடமாகத்திகழ்ந்து விட்டால் கணவனாகிய ஒருவனுக்கு இல்லாதது என்ன! அதற்கு மாறாக அமைந்து விட்டால் அங்கு பின் உள்ளது என்ன வாழ்க்கை? எனும் பாதைக்கு வழிகாட்ட கணவனுக்கு துணையாக வருபவள் வாழ்வை இருளாக்காது ஒளிகூட்டிட வேண்டும். கணவனும் மனைவிக்கு துன்பம் நிகழ்த்திடாது ஒன்றுபட்டு வாழவேண்டும். இருவர் மனங்களும் ஒன்றிக்கலக்கவே திருமணம் எனும் சடங்கு. அச்சம்பிரதாயத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும். சந்தேகம் கொள்ளாது சந்தோசம் அடைய இருவரும் கூடிவாழுதல் அவசியம்.
பெண் என்பவள் கடமை என்று தொண்டாற்றுவது மட்டும் அல்லாது கண்ணியத்துடன் நடந்து கொள்ளுதல் அவசியமாகும். கண்ணியம் என்பது உண்மை எனும் பற்றுடன் பதியை நேசிப்பவளாக அவர் கருத்துக்கு ஏற்புடையவளாக வாழுதல் ஆகும். எதிர்த்து வாதிடாது ஒத்துப்போகக் கூடியதாக வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவளாக மதிப்பளித்து நடக்கும் மனைவியாக இருந்து விட்டாலே தகராறு இல்லாது வரலாறு படைத்திடலாம். கணவன் என் பதி அவரை எச்சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்திடாது அவர்போகும் வழி சரியானது என்றால் கூடவே செல்வது மனையின் கடமை.
ஆனால் போகும் பாதை சீரற்ற மிகமோசமான பாதுகாப்பற்றதாக இருந்தால் கணவனை நல்வழிக்கு திருப்ப தகுந்த புத்திமதி கூறி நல்வழிப்படுத்துவதும் மனைவியின் தலையாய கடமையாகும். எங்கேயோ எப்படியோ தத்தம் வாழ்க்கையை ஒவ்வொருவரும் ஆரம்பிக்கின்றனர். ஆனால் ஒருகணவனும் மனைவியும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை சீரான சிறப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை என்றால் அங்கு இருவரும் சீரிய கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். வாழ்கின்றனர் என்று அர்த்தமாகும்.கணவன் மனைவி இருவருக்கும் சிறு கட்டுப்பாடு இருப்பது முக்கியமாகும். ஒருவரை ஒருவர் அடக்கும் கட்டுப்பாடு இல்லாது கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டவளாக, அடக்கப்பட்டவளாக இல்லாது அடக்கம் எனும் சொல்லுக்கு மனைவி ஏற்புடையவளாக வாழ்தலில் மகிழ்ச்சி இருக்கும்.
அப்படி பணிவு கொள்ளும் பெண்ணையே கணவனும் பக்தி செய்வான்.அப்பொழுது பரிவும் விட்டுக் கொடுக்கும் பன்பும் அவர்கள் இருவருக்கும் பிறந்து விடும். இப்படி கருத்தொருமித்த தம்பதிகள் தம்-பதி இதிலே பதிகள் இருவருமே பதிகளாக இனிமையாக வாழ்க்கை நடத்த நற்குழந்தைகள் உருவாகி அவர்களுக்கு கிடைக்கும். அக்குழந்தைகளும் அன்பு அறிவு பண்பு நிறைந்த பிள்ளைகளாக உருவாகிடுவர்.
ஆக பதி பக்தியில் திளைத்து நல்ல குடும்பமாக வாழும்போது கணவன் நீண்ட ஆயுளுடன் திகழ வேண்டும். எமது திருமாங்கல்யம் (தாலி) நிலைத்து பூவோடும், பொட்டோடும் மங்கலமாக வாழவேண்டும். என சுமங்கலிப்பெண்கள் சுமங்கலிப் பிரார்த்தனை செய்வர். பங்குனி மாதப்பிறப்பு அன்று காரடையான் நோன்பு நோற்று வழிபடுவர். காரிருள் அடையாது வாழ்க்கை பிரகாசிக்க வேண்டுமெனின் ஒவ்வொரு சுமங்கலிப்பெண்களும் தம் பதிக்காக நோன்பு நோற்கவேண்டும். கண் போல் பார்வைஒளி தருகின்ற காரைடையான்கள் நீண்ட காலம் ஐஸ்வர்யம் நிறைந்த வாழ்க்கையை மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்திட்டாலே துன்பம் அகன்றிடும். அதற்காகவே காரடையான் நோன்பு பெண்கள் அனுட்டிப்பர்.
உருகாத வெண்ணெயும் ஓரடையும் வைத்து நோன்பு நோற்றேன் என் கணவன் ஒருநாளும் என்னைப் பிரியாமல் இருக்க வரம் வேண்டும் என்று வேண்டி இறைவனை வேண்டுவர். காமாட்சி அம்மன் படத்திற்கு மஞ்சள்நூல் (நோன்பு சரடு) அணிவித்து அடையும் வெண்ணெயயும் படைத்து வெற்றிலை பழம் பாக்கு தேங்காய் யாவும் நைவேத்யம் செய்து வைத்து விரதம் அனுட்டிப்பர்.
இல்லத்தில் பங்குனி பிறக்கும் நேரம் தலையில் குளித்து சுத்தமாக ஆடை அணிந்து மங்களகரமாக விபூதி சந்தனம் குங்குமம் நெற்றியில் அணிந்து மேற்கூறிய காரடை வெண்ணெய் தாம்பூலப்பொருட்கள் யாவும் பூஜை அறையில் வைத்து காமாட்சி விளக்கேற்றி பூக்கள் சாத்தி வழிபடுதல் அவசியம். பூஜைஆராதனை சுவாமி படங்கள், சிலைகள் எல்லாவற்றுக்கும் ஆராதித்து ஸ்தோத்திரம் சொல்லி அர்ச்சிக்க வேண்டும். பின்பு மஞ்சள் நூலை எடுத்து கழுத்தில் அணிய வேண்டும்.குங்கும் எடுத்து நெற்றியிலும் நெற்றி வகிட்டிலும் வைத்துக்கொண்டு கணவர் பாதத்தில் விழுந்து நம்ஸ்காரம் செய்து வணங்கி எழுந்து ஆசிபெறவேண்டும்.. சாவித்திரி நோற்ற விரதமாகியதால் சாவித்திரி விரதம் என்வும் போற்றப்படும் நோன்பை நோற்று இறையருள் பெறுவோம்.