அயோத்தி 'ராமஜென்ம பூமி' என்றால், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா இந்துக்களால் 'கிருஷ்ண ஜென்ம பூமி' என அழைக்கபடுகிறது. இங்குள்ள மதுரா கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று வரும் பயண அனுபவத்தை வாசகர்களுடன் இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார் எழில்செல்வி.
மதுராவில் கால் பதித்ததுமே குறும்புக் கண்ணன் (கிருஷ்ணனின் குழந்தைப்பருவ பெயர்) தன் பிஞ்சுப் பாதம் பதித்து, நின்ற, நடந்த, ஓடிய இடங்களிலா நாம் நிற்கிறோம் என்கிற எண்ணம் மேலோங்கி நம் உடல் சிலிர்க்கிறது.
மதுரா எங்குள்ளது?
மதுரா இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஓர் மாநகரமாகும். ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன. இது மதுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராகவும் உள்ளது. (தகவல் விக்கிபீடியா)
சிறையில் கிருஷ்ணன் பிறந்த கதை சுருக்கமாக!
கம்சன் எனும் அரக்ககுணம் படைத்த அரசனை அளிக்கப் பிறந்தவன் கண்ணன். கம்சனின் சகோதரி தேவகிக்கும், அவளுடைய கணவர் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தைதான் கம்சனை அளிக்கப் போகிறான் எனும் தகவல் தேவகியின் திருமணத்தன்றே கம்சனுக்கு அசரிரீயாக ஒலிக்கிறது. உடனே கோபத்தில் தங்கையையே வெட்டிச் சாய்க்க முயன்றவனை 'எட்டாவது பிள்ளையால்தானே உனக்கு அழிவு. அதை மட்டும் கொன்றுவிட்டு. உன் சகோதரியை கொன்ற பாவம் உனக்கு வேண்டாம்' என்று வசுதேவர் அறிவுறுத்துகிறார்.
உடனே தம்பதியரை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறான் கம்சன்! அடுத்தடுத்து தேவகிக்கு பிறந்த ஆறு குழந்தைகளையும் குளத்தில் அடித்துக் கொன்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஏழாவது கரு தேவகியின் வயிற்றில் கலைக்கப் பட்டு வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோஹினியின் வயிற்றில் திருமாலின் அருளால் பலராமனாக அவதரிக்கிறது.
தேவகி கம்சனிடம் தன் ஏழாவது குழந்தை கலைந்துவிட்டதாக கூறுகிறாள். எட்டாவது குழந்தைக்காக கம்சன் காத்திருந்த போதுதான் திருமாலின் கருணைப்படி உருவாக்கப்பட்ட யோகமாயா வேறொரு இடத்திலிருந்த நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் பெண்ணாகப் பிறக்கவும் ஆவன செய்யப்படுகிறது.
ஆவணிமாதம் தேய்பிறை அஷ்டமி, ரோகினி நட்சத்திரத்தில் சிறையினில் நள்ளிரவில் எட்டாவது மகனாகப் பிறக்கிறான் ஆலிலை நாயகன் கண்ணன். கம்சனிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வேண்டுமே. வசுதேவரும்,தேவகியும் துடிக்கிறார்கள், தவிக்கிறார்கள். வரலாறு காணாத மழை என்பதுபோல் புராணம் காணாத மழை கொட்டித்தீர்க்கிறது. 'யசோதையிடம் கொண்டுபோய் இந்த தெய்வக்குழந்தையை சேர்ப்பி' என்றுகூறி அசரிரீ வசுதேவருக்கு வழிகாட்ட வசுதேவர் தன குழந்தையை கூடையில் சுமந்து செல்கிறார். ஆதிஷேசன் குடைபிடிக்க, வெள்ளம் புரண்டோடும் யமுனை நதி வசுதேவருக்கு வழி விடுகிறது. அக்கறையை அடைந்து நந்தகோபன் அரண்மனையில் 'என்ன தவம் செய்தனை யசோதை?' என்று மற்றவர் பொறாமைப் படும் அளவிற்கு பேறுபெற்ற யசோதையிடம் குழந்தையை சேர்க்கிறார் வசுதேவர்.
அத்துடன் யசோதைக்குப் பிறந்த யோகமாயாவை தூக்கிக் கொண்டு சிறை வந்து சேர்கிறார் வசுதேவர். குழந்தை பிறந்த செய்தி அறிந்து ஆவேசமாக வருகிறான் கம்சன். பின் பெண்குழந்தையா? என்று ஏமாற்றமடைகிறான். என்றாலும் அந்த குழந்தையை உயிரோடுவிட மனமின்றி குழந்தையை குலத்துச் சுவரில் அடிக்க முற்படுகையில்தான் குழந்தை விண் நோக்கிப் பறக்கிறது. அவள்தான் திருமால் அனுப்பிய யோகமாயாவாயிற்றே. 'கம்சா, எட்டாவதாகப் பிறந்தவன் மறைந்து வளர்கிறான். கண்டிப்பாக உன்னைக் கொள்ளவருவான் ' என கூறி மறைகிறாள் யோகமாயா. கோகுலம் எனும் பிருந்தாவனத்தில் கண்ணன் குறும்புடன் சுட்டிக் குழந்தையாக வளர்ந்து, ராதையின் மணாளன் ஆனதும், கம்சனை வதைத்ததும் தனிப்பெரும் கதை! இதோ கண்ணன் பிறந்த புனித பூமியான மதுராவிலிருந்து இனி
மதுரா கிருஷ்ணன் கோயில் பற்றி
கண்ணன் பிறந்த 'மதுரா', வளர்ந்த 'பிருந்தாவன்' இரண்டும் 'வ்ரஜபூமி ' என்று அழைக்கப்படுகிறது. கண்ணன் விரும்பி சாப்பிடும் பால், பால் ஸ்வீட், வெண்ணெய் என்று மதுரா நகர் கடைவீதிகளில் ஒரே பால்மயம்தான்! மண் தம்ளர்களில் மண்வாசம் மணக்கமணக்க சூடான பால் தருகிறார்கள். கோபியர் கொஞ்சும் கிருஷ்ணன் தான் மாடுமேய்த்தவனாயிற்றே. அதற்கு சாட்சியாக மதுராநகர வீதிகளில் இன்றும் பசுக்கள் மிகச் சுதந்திரமாக வளைய வந்துகொண்டிருக்கின்றன.
ராதாவும்,கிருஷ்ணனும் காதல் மயக்கத்தில் கிரந்கியிருப்பது போன்ற பரவசம் தரும் எழில்கோலம்! காதல்தான் அன்பு. அந்த அன்பின் தீவிரத்தன்மையை உணர்த்துவதுதான் எங்களின் இந்த ஆனந்தகோலம் என்பதைச் சொல்லும் வகையில் இருக்கிறது. அதே மயக்கத்தில் 'ராதே ,கிருஷ்ணா..' என்று மனமுருகி நின்றுவிட்டு திரும்பினால், ராதாரமணர் கோயில்.
இந்த கோயிலின் உருவச் சிலை ஒரே சாளக்கிராம கல்லில் செதுக்கப் பட்டது. அருகிலேயே மரத்தால் செய்யப்பட்ட 'ஹோகி' என்ற இருக்கையும், ஒரு சால்வையும் உள்ளது. இது சைதன்ய மகாபிரபு இந்த கோயிலுக்கு அளித்ததாம்.
ராதையின் உருவச் சிலைக்குப் பதிலாக! கோயிலுக்கு எதிரில் கிருஷ்ணன் சிலை உள்ளது. அதன் அருகில் ராதையின் சிலை இல்லை. அதற்கு பதிலாக அழகிய கிரீடத்தை ராதையாக பாவித்து ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அருகில் வைத்துள்ளார்கள். பக்திப் பரவசத்தோடு கோயிலின் எல்லாப் பகுதிகளையும் பார்த்து ரசித்து சிலிர்த்துக் கொண்டிருக்கும்போதே, மனதுக்குள், எங்கே கிருஷ்ணன் பிறந்த அந்த சிறை? என ஒரு பெரிய கேள்விக்குறி. இந்த கட்டிடமோ நவீன கட்டிடம். கிருஷ்ணன் பிறந்ததோ மதுராவின் சிறையின் ஒரு சிறு அறையில் என சந்தேகம் மேலோங்க, மக்கள் வரிசை வரிசையாக ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு செல்வதைப் பார்த்து பின்தொடர்ந்தேன். அருகில் தான்ன் இருக்கிறது, அந்த பழமை மாறாத கம்பீரச்சிறை! ஒரு ஆள் மட்டுமே நுழைந்து நடக்கும்படியான அந்த குறுகிய சந்துகளை எல்லாம் கடந்து நடக்க, நடக்க அட! 'மரங்களில் நான் அரசு' என்ற கண்ணன் அரசந்தளிர் போன்ற பிஞ்சுக் குழந்தையாய் அவதரித்த புனித இடம் கண் முன்னே விரிகிறது.
புனிதபூமி தரும் புனித வாழ்வு!ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அந்த இடம் சிறிதும் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருவதால், நாமும் புராண காலத்தின் அந்த மணித்துளிகளில் நிற்கும் பேறு கிடைத்துவிட்டதாக சிலிர்க்கின்றனர் பக்தர்கள்!
வெண்ணெய் திருடும் மதுரா குழந்தைகள்!
கோயிலுக்கு அருகிலேயே இருக்கிற கிருஷ்ணன் வளர்ந்த இடமான பிருந்தாவனத்தை புனித பூமியாக கருதுவதோடு, அங்கு வசிப்பவர்கள் தங்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் கிருஷ்ணனின் மறுபிறவி என்று நம்புகிறார்கள். பசுமாடுகளை வீடுகளில் குழந்தைகள் போல உலவவிடுகிறார்கள். வெண்ணெயை கடைந்து வேண்டுமென்றே ஒழித்து வைத்துவிடுகிறார்கள். குழந்தைகள் தெரியாமல் கிருஷ்ணன் போலவே வெண்ணெயை திருடி சாப்பிடுகிறார்கள்.
குழந்தை வரம் வேண்டுமா?
குழந்தை இல்லாதவர்கள் இந்த கிருஷ்ணன் கோயிலுக்கு சென்று வந்தால், குழந்தை வரம் கிடைக்கிறதாம். பஞ்சபாண்டவர்களின் பேறு பிரச்சனையையே தீர்த்து வைத்தவன் கண்ணன்! உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லாமலா இருப்பான்? குழலூதும் கண்ணனை குடும்பத்தோடு இங்கு வந்து தரிசியுங்கள். குடும்பமே அமைதி, மகிழ்ச்சியில் திளைக்கும் என்கிறார்கள் இங்குள்ளவர்கள்.
பழமை எழில்கொஞ்சும் பிரமாண்டமாக இருந்தும் கண்டுகொள்ளப்படாத குளம்! மதுராவில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலை அடைவதற்கு முன்னே ஒரு பிரம்மாண்ட குளம் உள்ளது. அதில் எந்நேரமும் நீரூற்று சுரக்கிறது. மாடங்கள், கோபுரங்கள், பச்சைபசேல் பாசிபடர்ந்த நீர் என்று மிக அழகிய பழமை எழிலோடு இருக்கிறது அந்தக் குளம். இருந்தாலும் அந்தக் குளம் மக்களால் கொஞ்சம்கூட மதிக்கப் படுவதில்லை. காரணம் கேட்டால், தேவகிக்குப் பிறந்த மற்ற ஆறு குழந்தைகளும் இந்த குலத்தின் சுவரில்தான் கம்சனால் அடித்துக் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்த குளத்தை எட்டிப் பார்ப்பதே பாவம் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.
- பயண அனுபவமும் கட்டுரையும் : 4தமிழ்மீடியாவுக்காக எழில்செல்வி