இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரிற்கு அடிப்படை காரணி, இனவாதம் அல்லது பேரின வாதம் என்கிறோம். ஆனால் அதை Racisme எனும் ஆங்கில சொல்லுடன் இணைத்து கதைப்பது மிக அரிது.
இனவாதத்தை பற்றி விக்கிபீடியா இப்படி கூறுகிறது.
"இனமே மனித இயல்புகளையும் அவர்கள் தகுதிகளையும் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி, இன வேறுபாடுகள் குறிப்பிட்ட இனங்களை மற்றவர்களிலும் உள்ளார்ந்த அடிப்படையில் மேலானவர்களாக ஆக்குகிறது என்னும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த கொள்கையே இனவாதம் அல்லது நிறவாதம் எனப்படுகிறது. இனவாத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் சில இனத்தவரை வெறுப்பர். அமைப்பு முறையிலான இனவாதத்தின் கீழ் சில இனக்குழுக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதையும், சிலவற்றுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவதையும் காணலாம்."
அதுவே இலங்கையில் 1950-60 களில் தமிழ்-சிங்களவர்களுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த தொடங்கியது நீங்கள் அறிவீர்கள். யுத்தம் முடிவுற்று, 15 வருடங்களாகப்போகிறது. ஆனால் இனவாதக் கொள்கைகள் குறித்தும் அவற்றினால் தொடரக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும் எந்தளவு இலங்கையின் உள்ளக அரச கட்டமைப்புக்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை.
ஆனால் சுவிற்சர்லாந்தில் ஒவ்வொருவருடமும் மார்ச் நடுப்பகுதியில் ஒரு வாரம், இனவாதத்திற்கு எதிராக பல மாநிலங்கள் இணைந்து ஒவ்வொரு ஊர்களிலும் பல விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. அது இப்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தெருக்களில் அது குறித்த காட்சிப்பதாகைகளையும், பேருந்துகளில் அது குறித்த விளம்பரங்களையும் அடிக்கடி காணக்கூடியதாக இருக்கிறது.
ஒரு பெரு யுத்தத்தை இதுவரை சந்தித்திடாத சுவிற்சர்லாந்து போன்றதொரு நாட்டில் இனவாதத்தை பற்றி வருடந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னவிருக்கிறது என உங்களுக்கு கேள்வி எழுகிறதா?
சுவிற்சர்லாந்தியின் பொருளாதார அபிவிருத்தியில் மிகப்பெரும் பங்கு இங்கு வாழும் வெளிநாட்டு, அல்லது பல்லினங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை சாரும். பல நூற்றாண்டுகளாக இடம்பெயர்ந்த இத்தாலியர்கள், போர்த்துகேயர்கள், மத்திய கிழக்கு நாடுகளின் யுத்தத்தில் இடம்பெயர்ந்த யுகொஸ்லாவிய, அல்பானனிய, துருக்கி இனத்தவர்கள், வேலைதேடி இடம்பெயர்ந்த தென் அமெரிக்கர்கள், அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கை, எதியோப்பிய, எரித்திரிய, ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள், கடந்த வருடங்களில் இடம்பெயர்ந்த சிரிய, உக்ரேனிய, பாலஸ்தீனியர்கள், என மிகப்பெரிய பல்லினத்தவர்களை கொண்ட நாடாக சுவிற்சர்லாந்து திகழ்கிறது.
அத்தோடு இவ்வாறு உள்வாங்கப்பட்டுவரும் பல்லினத்தவர்களாலேயே, சுவிற்சர்லாந்தின் முதுமை நிலையில் இருக்கும் பல உள்நாட்டவர்களின் வாழ்க்கைத் தரம் தொடர்ந்து பாதுகாப்பானதாக இருக்கிறது. அவரக்ளுக்கான அனைத்து சேவையும் இப்பல்லின இளம் சமுதாயத்தாலேயெ செய்ய முடிகிறது.
ஆனால் எங்கும் போல், சுவிற்சர்லாந்திலும் தீவிர வலதுசாரி கட்சிகள் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கொள்கைகள், பயமுறுத்தல்களை தொடர்ந்து செய்து வருகின்றன. அண்மைய உதாரணம், சுவிற்சர்லாந்து 10 மில்லியன் சனத்தொகையை கடக்கப் போகிறது. வெளிநாட்டவர்கள் தான் காரணம், தடுத்து நிறுத்துங்கள் எனும் வாக்கியச் சுலோகங்கள், பொதுத் தேர்தலின் போது பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.
அதோடு அவ்வப்போது ஊடகங்களும் தீவிரவாத அச்சுறுத்தல், கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தலுடன் எப்போதும் ஒரு வெளிநாட்டவரை இணைத்து காண்பிக்கும். ஆக இப்படியான நடவடிக்கைகள் உள்நாட்டவர்களை ஒரு பயத்துடனே வைத்திருக்கிறது.
இதனால் தான் இனவாதத்திற்கு எதிரான இவ்விழிப்புணர்வு பணிகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செய்துவருகின்றன. இவற்றில், சட்டென கவர்ந்து, எம்மை நிறுத்தி சிந்திக்கவைக்கும் விளம்பர சித்திரங்களை சுவிஸ் தலைநகர் பேர்ன் மாநகரம் இப்போது மேற்கொண்டிருக்கிறது. இவற்றின் காட்சி வடிவமைப்புக்களை மாத்திரம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இதில் எழுதப்பட்டிருக்கும் ஜேர்மனிய மொழிச் சொற்கள் "நீங்கள் அவதானிக்க தவறும் ஒன்றை நான் அவதானிக்கிறேன்" எனச் சொல்கின்றன, இனவாதத்தை எதிர்க்கும் இக்காட்சி வடிவமைப்புக்களை புரிந்து கொள்ள சொற்கள் தேவை இல்லை. ஒரு நல்ல சித்திரம், 1000 சொற்களுக்கு சமம் என்பர். நாளாந்த இனவதாம் வெளிப்படையாக தெரியப்போவதில்லை. ஆனால் மிக கொடூரமானது, கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை பரப்பக் கூடியது என்கின்றன இச்சித்திரங்கள்.
கொஞ்சம் நின்று நிறுத்தி நிதானமாக பாருங்கள். புரியும்.
நன்றி: பேர்ண் மாநகரம்
- 4தமிழ்மீடியாவுக்காக: ஸாரா