வாழ்க்கை பாதையை அடைய பயணத்தை தொடங்கும் பாலோ கொயலோ அதில் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை கலந்து தந்திருக்கும் மற்றுமொரு படைப்பு (The Pilgrimage) 'தி பில்கிரிமேஜ்'. (புனித யாத்திரை)
1986 ஆம் ஆண்டில் ( Paulo Coelho )பாலோ கொயலோ, ( Regnus Agnus Mundi )ரெக்னஸ் அக்னஸ் முண்டி (RAM) என்பவரின் வழித்தடத்தை பின்பற்றி அவருக்கு பின்னரான தரவரிசையில் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இருக்கும் அதிசய வாளைத் தேடி ஸ்பெயின் முழுவதும் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. இதன்போது எளிமையைப் பற்றிய நுண்ணறிவை இந்த பயணத்தின் மூலம் அவர் கற்றுக்கொள்ளவும் அதன் மூலம் உண்மையின் தன்மையைப் புரிந்து கொள்ளும்போது பயணம் அவரை மாற்றுகிறது.
'பெட்ரஸ்' என அழைக்கப்படும் வழிகாட்டியுடன் கொயலோ தன் புனித பயணத்தை ஆரம்பிக்கிறார். கதையும் ஆரம்பமாகிறது. பயணத்தின் போது, பெட்ரஸ் அவருக்கு தியானப் பயிற்சிகள், மேற்கத்திய மாய சிந்தனை மற்றும் தத்துவத்தின் சில கீழ்நிலைக் கூறுகளை அவருக்கு அறிமுகப்படுத்தி, கற்பித்துக்கொண்டே செல்கிறார். இடைக்காலத்திலிருந்து பல்வேறு யாத்ரீகர்கள் பயணித்த புகழ்பெற்ற சான் டியாகோவின் சாலைகளின் ஊடாக பயணமும் கதையும் பயணிக்கிறது.
'ரசவாதி' எனும் அவரின் அற்புதபடைப்பை போல் இந்நூல் பெரிதும் அவரது ரசிகர்களை கவரவில்லை. இடையில் தொய்வான கதையோட்டம் என்றாலும் ஒருவர் தன் அனுபவத்தை சொல்லும் போது யார்தான் கேட்கமாட்டார்கள். இந்நூல் கதை தொடர்பாக அலசியபோது மலைப்பயணங்கள் குறித்து தெரியவந்தது.
சுற்றுலாவாசிகள் சிலர் தங்கள் கடுகதி வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இயற்கையோடு இணைந்துகொள்ளும் தங்கள் பட்டியலில் மலைப்பயணத்தை தவறவிடமாட்டார்கள். உளச்சூழலையும் புறச்சூழலையும் பேணி பாதுகாக்கும் இந்த மலைச்சூழ் பயணத்தின் நன்மைகள் ஏராளம். அதற்காகவே தங்களை அர்ப்பணித்து வாழ்நாள் முழுவதையும் புனிதமாக்குபவர்களும் இருக்கிறார்கள். இந்த பயணங்களில் பல வகைகள் உள்ளன. பொதுவாக மலை ஏறும் ஆர்வலர்களிடம் பரவலாக காணப்படும் நிலைகளில் இரண்டு விதமான பயணங்களை கையாளுவர். அவை மலை நடைப்பயணம் (Hiking) மற்றும் மலை ஏற்றம் (Trekking)
அடிப்படையில் இரண்டும் இயற்கையுடன் மூழ்கும் நடைப்பயணத்துடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் விருப்பம் மற்றும் திறன் அடிப்படையில் வேறுபாடுகளால் பொருந்துகிறது.
எனவே மலை நடைப்பயணம்; மலை ஏற்றம்; என்ன வித்தியாசம்?
நடைபயணம் என்பது பெரும்பாலும் நியமிக்கப்பட்ட பொழுதுபோக்கு பகுதிகளில் பொதுவாக நன்கு வரையறுக்கப்பட்ட பாதைகளில் நடப்பதைக் குறிக்கிறது, குறுகிய, நிதானமான நடைப்பயணங்கள் முதல் நீண்ட, சவாலான பாதையில் நடப்பதாக அமையும்.
மலையேற்றம் என்பது பெரும்பாலும் மலைப்பகுதிகள் அல்லது வனப்பகுதிகளில், பல நாள் மலை ஏறுவது வழக்கமாகும், மேலும் அவை தொலைதூர மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு வழியாக அழைத்துச் செல்லும். மலையேற்றங்களுக்கு கவனமாக திட்டமிடல் தேவைப்படுகிறது, ஏனெனில் போதுமான பொருட்கள் மற்றும் முகாம் உபகரணங்களை கையோடு கொண்டு செல்வது அவசியம்.
மேலும் நடைபயணம் என்பது பொதுவாக சில மணிநேரங்கள் முதல் ஒரு முழு நாள் வரையிலான ஒரு செயலாகும், நன்கு வரையறுக்கப்பட்ட பாதைகளில் மிதமான தூரத்தையே கடந்துசெல்வர். மிக அரிதான சந்தர்ப்பங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் பயணிக்க வேண்டிய பாதை காணப்படலாம். இப்பாதைகள் படிப்படியான சாய்வுகள் மற்றும் சரிவுகளை உள்ளடக்கியிருக்கலாம். விரும்பும் நபர்களால் அவற்றை கடந்துசெல்லக்கூடியதாக இருக்கும்.
ஆனால் மலையேற்றம் தொலைதூர மற்றும் பல நாள் பயணங்களை உள்ளடக்கியது. மலையேற்றம் செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் கணிசமாக நீண்ட தூரத்தை கடக்கிறார்கள், பெரும்பாலும் கடினமான நிலப்பரப்புகளான செங்குத்தான ஏற்றங்கள், பாறைகள் நிறைந்த பாதைகள் மற்றும் மாறுபட்ட வானிலை நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். அத்தோடு மலையேற்றங்களுக்கு அதிக அளவு சகிப்புத்தன்மை மற்றும் உடல் தகுதி தேவைப்படுகிறது.
எனினும் சிலருக்கு, மலை நடைபயணம் கடினமாகவும் ஆனால் மலையேற்றம் இலகுவானதாகவும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
தனியாகவோ, குடும்பத்தினரோடோ அல்லது குழுவாகவோ நடைப்பயணங்களை தொடங்கலாம். இலங்கை உட்பட குறிப்பிட்ட நாடுகளில் தனியார் அமைப்புக்கள் பல இப்பயணங்களை முன்னெடுக்கின்றன. அவ் அமைப்பின் மூலம் இணைந்து நடைபயணம் மேற்கொள்வது மிகவும் சிறந்த ஆரம்பமாகும். ஏனெனில் அங்கே உங்களுடன் ஒத்த எண்ணம் கொண்டவர்களைச் சந்திப்பீர்கள், அவர்கள் உங்களுடன் நடைபயணம் மேற்கொள்வார்கள். மற்றும் தேவையான வழிகாட்டுதலுடன் தொடர்ந்து நடைபயணம் மேற்கொள்ள உங்களுக்குள் உத்வேகம் பிறக்கும்.
தினமும் நடப்பது ஆரோக்கியமான பயிற்சி என அனைவரும் பரிந்துரைப்பதை கேட்டிருப்போம், உண்மையில் CDC ஆல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின் படி, வாரத்தில் ஐந்து நாட்களில் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரம் நடக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இது உங்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை பாதியாக குறைப்பதாகவும் தெரிவிக்கிறது. தொடர்ந்து நடைபயணம் மற்றும் மலையேற்றம் உங்கள் இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை மேம்படுத்துவதுடன் அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றின் தாக்குதல்களிலிருந்து உங்கள் வாழ்க்கையை முன்னோக்கி வைக்க உதவுகிறது.
பாலோ தன் வாளைத்தேடி பயணித்ததில் வாழத்தொடங்கினார். நாம் வாழ்வை தேடும் பயணத்தில் "நடப்போம்!"
- 4தமிழ்மீடியாவிற்காக : ஹரனி