free website hit counter

வரலாற்று நாயகி - வயது பதினைந்து

முற்றம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆம்ஸ்ரடாம்,  Prinsengracht தெருவின் 263 இலக்க வீட்டுக் கதவின் முன் நீண்டிருந்த  மக்கள் வரிசை, வியப்பு, துயரம், மகிழ்ச்சி, என்பவற்றின் கலவையாக நின்றது.

இன்னல்கள் சூழ்கையிலும், எண்ணங்களைத் துறவாத வரலாற்று நாயகி வாழ்ந்த இடத்தை, ஒருமுறையேனும் பார்த்து விடவேண்டும் என்ற பேரவா, வயது வேறுபாடின்றி நிறைந்திருந்த அக் கூட்டத்தில் மிகுந்திருந்தது. அந்த வரலாற்று நாயகிக்கு வயது பதினைந்து. அவள்தாள் அன்ன பிராங் Anne Frank.

அன்ன பிராங் வாழ்ந்த காலம்  வெறும் பதினைந்து ஆண்டுகளே. பதினைந்து ஆண்டுகளில் சுமார் இரண்டு வருடங்கள் மட்டுமே,  வாழ்ந்திருந்த வீடு அவளின் நினைவு சொல்கிறது. அந்த நினைவிடம் காண நிரையில் நிற்கும் மனிதர்களின் மனவுணர்களில் அன்ன பிராங்கின் அந்த இரு வருட வாழ்வுத் துயரம் பதிந்திருக்கிறது .  உண்மையில் அது ஒரு இருள் சூழ்ந்த வாழ்வு. ஆனால் அதனை  அதன் போக்கிலேயே வாழ்ந்து, பதிவு செய்தாள் அச் சிறுமி. அதனால்  இன்றும் அறியப்படுகிறாள்.

ஜேர்மனியின் பிராங்பூட்  நகரில் 1929  ஜூன் 12,ல் பிறந்தவள்,  ஆன்ன பிராங்  என்றழைக்கப்படும்  ஆன்னலீசி மேரி பிராங். எழுத்தாளராக வேண்டுமெனும் அவளின் இளவயதுக் கனவுக்குத் தடையாகவிருந்தது இரண்டாம் உலகப் போர். யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்,  ஜேர்மனியில் அவர்களது குடும்பத்தின் இருப்பு அசாத்தியமாக, நெதர்லாந்துக்கு இடம் பெயர்ந்தார்கள்.

நெதர்லாந்தில் குடியேறிய அன்ன பிராங்கின் குடும்பத்திற்கு நெடுநாள் நீடிக்கவில்லை நிம்மதி. நாசிப்படைகள் நெதர்லாந்தினைக் கைப்பற்ற, தந்தை ஆட்டோ பிராங், தன் வணிகச் செயலகக் கட்டிடத்துடன் தொடர்பு பட்டிருந்த  இரகசிய அறையொன்றில் தனது குடும்பத்தை மறைத்துக் கொள்கின்றார். அவர்களோடு ஆன்ன பிராங்கின் அத்தை குடும்பமும் அங்கு மறைந்து கொள்ள, சுமார் இரு வருடங்கள் நீடிக்கிறது அந்த மறைவு வாழ்க்கை.

உயிர்காத்துக் கொள்வதற்காக, தமக்குத் தாமே வைத்துக்கொண்ட சிறையது. அதற்குள்ளிந்தவாறே, முன்னொருபொழுதில் தனக்குப் பரிசாகக் கிடைத்த நாட்குறிப்பொன்றில், அன்னா பிராங் தன் எண்ணங்களை எழுத்துக்களாக,  பதிவு செய்கின்றாள். அப்போது அவளுக்கு வயது பதின்மூன்று.

அந்தப் பதிவுகள் அவர்களது மறைவு வாழ்க்கை மட்டுமல்லாது, இரண்டாம் உலகப்போரின் துயரினையும் இணைத்தே பதிவு

செய்கின்றது.இவ்வாறு எழுதப்பட்ட அவளது குறிப்புக்களை, அன்ன பிராங் குடும்பத்தின் மறைவு வாழ்க்கையின் போது அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த நெதர்லாந்துப் பெண்மணி  மையீப் பின் அன்பின் வலிமையும், ஆழ்ந்த கவனிப்பும், அர்ப்பணிப்பான செயற்பாடும்,  பாதுகாத்து வைத்திருக்க, இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னதாக, நாசிப்படைகளின் சிறையிலிருந்து மீண்ட தந்தை ஆட்டோ பிராங்கிற்கு  தன் மகளின்  நினைவாகக் கிடைக்கிறது.  அக் குறிப்புக்கள்  ‘The Diary Of A Young Girl’ எனும் புத்தகமாக 1947ல் வெளியிடப்பட்டது.

அவளது கனவு நனவாகியதை, அவளது எழுத்துக்கள் புத்தகமாக உருவாகியதை, பின்னாட்களில் எழுபது மொழிகளில் அப்புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டதை அன்ன பிராங் அறிந்திருக்கவில்லை. அவள் குறிப்புக்கள் எழுதிய மறைவிடத்திலிருந்து 1945ல் நாசிப்படைகளிடம் காட்டிக் கொடுக்கப்பட அவளது குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியான வதை முகாம்களில் சிறைவைக்கப்பட்டனர்.  ஜேர்மனியின் பேர்கன் - பெல்சன் நாஜி வதை முகாமில் சிறைவைக்கப்பட்ட அன்ன பிராங், கடும் சித்திரவதைகளாலும், கொடிய நோயினாலும், 1945 மார்ச் மாதத்தில்  உயிர் துறந்தாள். ஆனால் அவளது எண்ணம் இன்றளவும் உயிர்ப்புடன் உள்ளது.

 

நெதர்லாந்தின் கால்வாய் கரையருகே அமைந்துள்ள அந்த வீடு, அன்னபிராங்கின் நினைவு சொல்லும் அருங்காட்சியகமாக இயங்குகிறது. அவளது தந்தையால் தொடங்கப்பட்ட அறக்கட்டளை அமைப்பு, அன்னபிராங்கினைப்போன்ற இளவயதுச் சிந்தனையாளர்களுக்கு அள்ளி வழங்கிட, இளங்கனவுகள் பல இன்றளவும் நனவாகின்றன. அவ்வாறு நனவாகும் கனவுகளிலெல்லாம் அன்னா பிராங்கின் வாழ்வு தொடர்கிறது. 

அந்த வீட்டுக் கதவின் முன் நின்று கண்ணீர் மல்குபவர்கள், நினைவுகளை நிழற்படங்களாகப் பதிவு செய்பவர்கள் அன்ன பிராங்கினது உயிர்ப்பின் சாட்சியங்களாக  நீள, அந்த நீட்சியில்  நிறைந்திருக்கும் இளையவர்கள்,  எதிர்மறைகளை வெல்லும்வகை தெரிந்தவர்களாக  நம்பிக்கை தருகின்றார்கள்.

வாழ்க்கையினை, அதன் போக்கிலேயே வாழ்ந்து, பதிவு செய்பவர்கள், தம் காலம் கடந்தும் நமக்கு நம்பிக்கை தருபவர்கள், வரலாற்றின் நாயக, நாயகிகள். அன்ன பிராங் வரலாற்று நாயகி.

4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula