“நாளைக்கு அவை வந்திருவினம்தானே…?” எனும் கேள்வியில் இருந்த நாளை, இன்றான போது, விடியல் வெளிச்சத்தைச் சிந்தத் தொடங்கியிருந்தது.
கண்விழித்த செல்லாச்சி, கலைந்திருந்த முடியைக் கோதி அள்ளி முடிச்சவாறே முற்றத்தை நோக்கினாள். முதல் நாளில் நட்ட வாழையே அவள் முதல் பார்வையாக இருந்தது.
வைரவன் வழமைக்கு மாறாக வாசல்படியை விட்டு, வாழையினடியில் சுருண்டு கிடந்தது. வேலனைத் தட்டியெழுப்பி அதனைக் காட்டினாள்.
உடம்பின் சோம்பலை முறித்துக் கொண்டு எழும்பியவன், கண்களைக் கசக்கியவாறு அவள் கை காட்டிய பக்கம் பார்த்துவிட்டு,
“ ஈரக் குளிர்ச்சிக்காக அங்கே கிடக்குதாக்கும்..” எனச் சொல்லியவாறு ஒரு கொட்டாவியுடன் மீன்டும் சரிந்து கொண்டான்.
செல்லாச்சியின் மனசு அவன் சொன்னதை ஏற்கவில்லை.
“இன்டைக்கு அவை வந்திருவினம். காலமையே வந்திட்டாலும், எதுக்கும் வேளைக்கே சமைப்பம்…” எனத் தன்னுள்ளே சொல்லிக் கொண்ட செல்லாச்சி, படுக்கையிலிருந்து எழுந்தாள்.
படுத்திருந்த வேலனைப் பார்த்து ‘இந்த மனுசன் சரியான சோம்பேறியாப் போச்சு..” என நினைப்பவள் போல அவனைப் பார்த்தாலும் சொல்லவில்லை. வேலனின் உழைப்புத் தெரிந்தவள் அவள். விழுந்து முறிவதற்கு முன்பெல்லாம் விடிகாலையிலேயே வேலன் பரபரப்பாகிவிடுவான்.
ஏழெட்டு வாழைக்குலைகளை சைக்கிளின் பின்னே கட்டியவாறு சந்தைக்கு அவன் போய் சேருகையில்தான் சூரியனே எழுந்து கதிர்பரப்பி வெளிச்சந் தருவான். சந்தையில்லாத நாட்களில் வேறு வேலைகள் என எப்போதும் விடியலுக்குப் பிரியமானவன் வேலன். அவனை முடக்கி விட்டது காலம். ஆனாலும் அவன் முறுக்கேறிய உடல் அழகு இன்னமும் கலையாதிருந்ததை ரசித்துக்கொண்டாள்.
காலை குளிர்ச்சியாக இருந்தது. பாயில் விரித்திருந்த சேலையை எடுத்து, வேலனின் மீது போர்த்தினாள். அதன் பரிசத்தை ரசித்த வேலன் அதனை இறுக்கிக் கொண்டு குடங்கினான்.
“ சின்னப்பிள்ளைபோல ..” செல்லச் சினுங்கலுடன் கிணற்றடிப் பக்கமாக நகர்ந்தாள்.
துலாக்கொடியைப் பிடித்திழுத்து நீர் மொள்ளும் போது முகங்கழுவ வேண்டும் என்பதே அவள் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது பின்னர் மாறியிருக்க வேண்டும். துலா மரத்தின் தலையை அமர்த்தி தாழ்த்தியவள் அதனை மேலெழுப்பாமல் விட்டு விலகினாள். துலாமரம் குறுக்காக நின்றது.
“வீட்டுக்கு விளக்கேத்த வேணுமெல்லே..” என்பது நினைவுக்கு வர, முகங்கழுவுதலைக் குளியலாக மாற்ற நினைத்தாள். இரவு வேலனின் இறுக்கத்தில் இருந்த அவள் உடம்புக்கும் அது தேவை போல இருந்திருக்கும்.
ராசம்மாவின் கணவன் தங்கராசு வெளியூரிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் நாட்களில், பல நாட்கள் விடிகாலையில் குளித்த பின்தான் ராசம் பெரிய வீட்டுக்குள் போவதை செல்லாச்சி கண்டிருக்கிறாள். சில நாட்களில் செல்லாச்சியிடம் சுடுதண்ணி வைக்கச் சொல்லிக் குளித்தும் இருக்கிறாள். அப்போதெல்லாம் ராசத்தின் உள்ளப் பூரிப்பினை அவளது உடலும், முகமும் பேசும். இன்றைக்கு அந்தப்பூரிப்பு செல்லாச்சிக்கானது. தாழ்ந்திருந்த துலா மரம் நிமிர்தெழுந்து, தண்ணீரை அள்ளிவார்த்தது.
வேலன் படுக்கையிலிருந்து எழுந்து மெதுவாக திண்ணைக்குந்துப் பக்கமாக இழுத்து நகர்ந்தான். கைகளை ஊன்றிக் குந்துக்கு தாவியேறினான். சவாலாக இருந்தாலும் முடியும் என்பது சாத்தியமாகிவிட்ட திருப்தி முகத்தில். மூச்சின் இரைப்பை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயற்சித்தான். பின்வளவு இலுப்பையின் வாசத்தை அள்ளி வந்தது காற்று. அதன் வாசத்தில் கிறங்கி, கண்களை மூடி ஆழச் சுவாசித்துக் கொண்டான்.
அவன் சுவாசத்தில் வாசனையின் மாற்றம் உணரக் கண்விழித்தான். அருகே ஈரத்தின் எழிலோடு செல்லாச்சி நின்றாள். அவளிடமிருந்துதான் அந்த வாச மாற்றம் வந்ததைப் புரிந்துகொண்டு, அவளை ரசித்தான். குறுக்குக் கட்டாகக் கட்டிய அவளது பாவாடையின் கரைகளில் இருந்து சொட்டிய நீர்த்துளிகள் அவள் காலடி நிலத்தை ஈரமாக்கின. நனைந்திருந்த அவள் நினைவுகளைக் கிளப்பிவிட, வேலன் கடைவாயில் புன்னகை வழிந்தது. கண்களில் காதல் தெரிந்தது.
“ என்ர கால்கள கிட்ட எடுத்துத்தாறீரே…?” அவன் கேட்ட சக்ரநாற்காலியை பக்கமாக இழுத்து விட்டு, தலைவாசலில் கிடந்த அவளது முதல்நாள் புறப்பாட்டுப் பையை எடுத்துக்கொண்டு, “வாளியில் தண்ணி நிரப்பி விட்டிருக்கிறன்..” எனச் சொல்லியவாறு தலைவாசல் அறைப்பக்கமாகச் சென்றாள் செல்லாச்சி. வேலன் கிணற்றடிக்கு நாற்காலியை வலித்தான்.
அவன் கிணற்றடியால் வரும்போது, செல்லாச்சி பெரியவீட்டிலிருந்து வெளியே வந்தாள். நெற்றியில் திருநீற்றுக்குறியோடு நெருங்கி வந்தவள், கைவிரலில் இருந்த வீபூதியால் வேலனின் நெற்றியில் கோடிட்டாள். அவள் நெருக்கத்தில் ஊதுபத்தி மணத்தது. நிமிர்ந்து பார்த்தான் வேலன்.
தலையின் ஈரந்துவட்டுவதற்காக துணியைச் சுற்றி முடித்திருந்த கூந்தல் கொண்டையும், போட்டிருந்த முழுநீளச்சட்டையும், அந்தவீட்டுக்கே சொந்தக்காரிபோல ஒரு கணம் வேலனுக்குஅவள் தெரிந்தாள். சேலையிலிருந்த அவள் இப்போது “சோட்டி” என்ற சட்டைக்கு மாறியிருந்தாள். மெல்லிய நிறத்தில் சின்னப்பூக்களோடிருந்த அந்தசட்டையில் அவள் அழகு இன்னும் எடுப்பாகத் தெரிந்தது.
அவன் தன்னை ரசிக்கின்றான் என்பது செல்லாச்சியின் முகத்தில் மகிழ்ச்சியாகக் கொப்பளிக்க “என்ன புதுசாப் பாக்கவேண்டியிருக்கு…” எனச் செல்லமாக அவன் கன்னத்தில் தட்டினாள். தட்டிய அவள் கைகளை சட்டென்று பிடித்துக் கொண்ட வேலன், “இப்ப ஆரும் உம்மைப் பாத்தா, இந்தவீட்டுக்கே நீர்தான் சொந்தக்காறியென்டுதான் நினைப்பினம்..” நினைத்ததைச் சொல்லிவிட்டான்.
“நினைப்பு பிளைப்பக் கெடுத்துப் போடும் கண்டிரோ….” அவன் எண்ணத்துக்கும் பேச்சுக்கும் தடைபோட்டாள் செல்லாச்சி.
காலை போய் மதியம் வந்தது. ஆனால் வருவதாகச் சொன்ன அவர்கள் இன்னமும் வரவில்லை. செல்லாச்சி வாசல் படலையையும், சமையலையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டாள். பிரதான வீதியில் வாகனங்களின் சத்தங்கள் கேட்கும் போதெல்லாம் வேலன் படலையை நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
சமையலை முடித்துக்கெண்ட செல்லாச்சி, எல்லாவற்றையும் தலைவாசலுக்கு எடுத்து வந்தாள். வேலனும் தரைக்கு வந்தான். இருவரும் சேர்ந்தே சாப்பிட்டார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து சாப்பிடுவதே எப்போதோ ஒருநாள் நடக்கும் என்பதை நினைத்துக் கொண்ட செல்லாச்சிக்கு, தலைவாசலில் இருந்து இருவரும் சாப்பிடும் இந்தவேளை மறக்கக் கூடாதது போல் மனதில் தொற்றிக் கொண்டது. வேலனுக்கும் செல்லாச்சியின் சமையல் இன்று ஏதோஅதிகம் ருசித்தது போலவே தெரிந்தது.
சாப்பிட்டு முடிந்ததும், வைரவனுக்கு சாப்பாடு வைத்த பின் மிகுதிச் சாப்பாட்டை எடுத்துப் போவதற்கு ஏதுவாகப் பத்திரப்படுத்தினாள் செல்லாச்சி. சமைத்த ஏதனங்களை கழுவி வைத்தாள். எடுத்துச் செல்ல வேண்டிய பைகளைச் சரிபார்த்துக் கொண்டாள். எல்லாம் சரியாக இருந்தது. அவர்கள்தான் இன்னமும் வரவில்லை.
“என்ன வாறனென்டவையைக் காணேல்ல…?” குந்தில் இருந்த வேலனுக்கு பக்கத்தில் வந்திருந்துகொண்ட செல்லாச்சி கேட்டாள்.
“வந்திருவினம். அவைக்கும் எத்தினை கரைச்சல்களோ..?” நம்பிக்கையைப் பதிலாக்கிவிட்டு, அவள் முகத்தில் தெரிந்த கவலையின் கோடுகளை மாற்றி வரையும் முயற்சியில் இறங்கினான் வேலன்.
“நான் அப்பவே கேக்க வேணும் என்டு நினைச்சனான் எங்கால உமக்கு ராணிசோப்….?”
பார்வையால் அவனைத் துருவிக்கொண்டே “ கிணத்தடியில கிடந்திச்சு. எடுத்து போட்டன். ஆனாலும் நல்லாத்தான் மோப்பம் பிடிக்கிறீர்..” என்றவள் அவன் மூக்கைப் பிடித்துத் திருகினாள்.
அவள் கைகளைப் பிடித்து விலக்கியவாறே, “ அதுதானே பாத்தன். எங்கட வேர்வைக்கு லைபோய் சவக்காரம்தானே நல்லது என்டு பழக்கபட்டிருக்கிறம்…”என்றான் சிரித்தபடி.
செல்லாச்சியும் வேலனும் தலைவாசல் குந்தில் சேர்ந்திருப்பதை வாழை மரத்தடியில் படுத்திருந்த வைரவன், பார்த்தவாறு படுத்திருந்தது. இந்த முற்றத்தில் வாழும் நானும் இப்போதுதான் முதல்முறையாக அதனைக்காண்கின்றேன்.
அவர்கள் வந்துவிடுலார்கள் என்ற எதிர்பார்பில் எந்த வேலையையும் தொடங்காமல் காத்திருந்தார்கள். முகுந்தன் கொடுத்த சின்ன றேடியாவில் வேலன் அலைவரிசைகளைப் பிடித்துப் பழகிக் கொண்டிருந்தான். அதனால் வானொலி குழம்பி ஒலித்துக் கொண்டிருந்தது. செல்லாச்சி அதில் ஆர்வம் கொள்ளவில்லை. ஆனாலும் அவனைக் குழப்பாமல் எழுந்து சென்று இலக்சுமிக்கு வைக்கல் போட்டுவிட்டு, கன்றுக்குட்டியை அவிட்டுப் பாலூட்ட விட்டாள். “ இஞ்ச ஆருக்கு இப்ப பால் வேண்டிக் கிடக்கு. பாவம் கன்டுக்குட்டி நல்லாக் குடிக்கட்டும் ‘ எனக் கருணைப்பட்டாள்.
அவள் திரும்பவும் வேலனிடம் திரும்பி வருகையில், அவன் கையிலிருந்த வானொலி இடப்பெயர்வுச் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தது.
மாலையும் வந்தது. அவர்கள் இன்னமும் வரவில்லை.
“என்னவும் இன்னமும் அவையக் காணேல்ல..?” செல்லாச்சி சஞ்சலப்பட்டாள். அவளை ஆறுதல்படுத்தும் வார்த்தைகள் வேலனிடத்திலும் இல்லை.
“பாப்பம்... வேறென்ன செய்யிறது..?” அவர்கள் நேற்று வராமலிருந்திருக்கலாம். இந்த எதிர்பார்ப்பு ஏற்படாமலிருந்திருக்கலாம் எனக் கவலைப்பட்டான்.செல்லாச்சி தேநீர் ஊற்றிவரலாமென அடுக்களைப் பக்கம் போக நினைத்த போது, வீதியில் நாய்கள் குலைத்தன. வைரவன் கலவரப்பட்டது. படலையில் ஆளரவங்கள் கேட்கவே எழுந்து குலைக்கத் தொடங்கியது.
அவர்கள் வந்தார்கள். ஆனால் வருவதாகச் சொல்லிச் சென்றவர்கள் அல்ல என்பது நிமிட நேரத்தில் புரிந்துவிட்டது வேலனுக்கும் செல்லாச்சிக்கும்.
நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டே வேலன் றேடியோவின் குரலை நிறுத்தினான். செல்லாட்சி மருட்சியுடன் அவனுக்குப் பக்கத்தில் வந்து நின்றாள். வைரவன் குலைத்துக் கொண்டேயிருந்தது.
வந்து சூழ்ந்த துப்பாக்கி மனிதர்களின் நீட்டிய துப்பாக்கிகளும், தோரணைகளும், பெரும் அச்சத்தை தெளித்தது. அதில் விறைத்துப்போய் விக்கித்து நின்றாள் செல்லாச்சி.
இவ்வாறான நேரம் ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது வேலன் ஒரளவுக்கு ஊகித்திருந்தவன் என்பதால் நிலைகுலையாதிருந்தன்.
துப்பாக்கி மனிதர்கள் சூழவும் சுற்றிக் கொண்டார்கள். அயல் எங்கும் நாய்கள் பெருங்குரலில் குலைத்தன. அம்மன் கோயில் மணி அடித்தது. அது ஓய முன்னரே துப்பாக்கி வெடித்த சத்தமும் கேட்டது. பிரதான வீதியில் வாகனங்களின் பெரும் இரைச்சல் கேட்டது. அந்நியப்பட்ட மொழியில் பலரும் றேடியோக்களின் இரைச்சலோடு கத்தினார்கள்.
நீட்டிய துப்பாக்கி மனிதன் ஒருவன் “ ஒப கொட்டிய..? “ கேட்டான்.
வேலனுக்கு அவன் பேசும் மொழி தெரியாது. ஆனால் அது சிங்கள்ம் என்பதும், நீ ஒரு புலியா? எனக் கேட்பதும் நன்றாகவே தெரிந்தது. ஏனென்றால் இந்த மண்ணில் தமிழர்கள் இந்தக் கேள்வியைப் பலகாலமாகவே எதிர்கொள்கிறார்கள். வேலனும் எதிர் கொண்டுள்ளான். ஆனாலும் “சிங்களம்.. தெரியாது “ எனத் தமிழில் சொன்னான்.
“நம மொக்கத ..நம.. ?” அதிகாரமாகக் கத்தினான் .
“வேலன்..” இதுவும் பழக்கத்தில் வந்ததே.
சக்கர நாற்காலியையும், வேலனின் உடற்திரட்சியையும் கண்ட அவனுக்கு இவன்மீதான சந்தேகம் வலுவாக இருந்தது. அதனைப் பக்கத்தில் நின்றவனுடன் சிங்களத்தில் பகிர்ந்து கொண்டான். அவனும் தலையாட்டினான்.
துப்பாக்கியால் சக்கரநாற்காலியைத் தட்டி “ ஓபேத..?” என்றான். அவன் தலையசைப்பில் புரிதல் வைத்து, “என்ரதான். கால் ஏலாது. விழுந்து முறிஞ்சு போனன்..” என்றான்.
தலைவாசலுக்குள் நுழைந்த ஒருவன் சுற்றியிருந்த பொருட்களை ஆராய்ந்தான். எடுத்து வைத்த சாப்பாட்டினைக் காட்டி “கொட்டியாட்ட தென்ன..?” என வெருட்டினான். வேலனுக்கும் செல்லாச்சிக்கும் விளங்கவேயில்லை. விழி பிதுங்கினார்கள்.
பெரிய வீட்டுப்பக்கம் இருந்து வந்தவன், வேலனுக்குப் பக்கத்தில் நின்றவனிடம் வீடு பூட்டியிருக்கு எனச் சொல்லியிருக்க வேண்டும்.
“கொய்த..?” திறப்பைச் சைகையில் காட்டிக் கேட்டான். படத்தின் முன்னாலிருந்த திறப்புக் கோர்வையை எடுத்து நீட்டினாள்.
வந்தவன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். அந்தப் பார்வையில் கள்ளம் இருந்தது.
“யன்ன..” போ எனத் துப்பாக்கியால் பெரிய வீட்டுப் பக்கம் காட்டினான்.
“ வேணாம் சேர்…” என்று திறப்பை அவளிடமிருந்து பறித்து குந்தில் வைத்துவிட்டுக் கையெடுத்துக் கும்பிட்டான் வேலன்.
அவன் குரல் கெஞ்சியது. கைகள் இப்போது நடுங்கின…பருத்துக்குப் பயந்த குஞ்சென வேலனின் முதுகுப் பின்னால் ஒடுங்கிக் கொண்டாள் செல்லாச்சி.
நீட்டிய துப்பாக்கிகள் பயங்காட்டின..
அவளும் அவளும் – பகுதி 13
- தொடரும்