பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 388 தனி நபர்களுக்கு எதிரான தடையை இலங்கை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான 46/1 பிரேரணை நிறைவேற்றப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், தனிநபர்களுக்கு எதிரான தடையை அரசாங்கம் விதித்துள்ளது.
குறித்த அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிரான தடை, ராஜபக்ஷக்களின் கடந்த ஆட்சிக் காலத்தின் போதும் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், நல்லாட்சிக் காலத்தில், குறிப்பாக 2016ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட அமைப்புக்கள், தனி நபர்கள் மீதான தடை நீக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, மீண்டும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கையிலிருந்து சுயமாக வெளியேறிய தமிழ்த் தரப்பினரினால் தோற்றுவிக்கப்பட்ட குறித்த தமிழ் அமைப்புக்கள், விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கி இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியே அரசாங்கம் தடை விதித்துள்ளது. அத்தோடு, சம்பந்தப்பட்ட தமிழ் அமைப்புக்களை, ‘புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்’ என்று அழைப்பதையும் அரசாங்கம் தவிர்த்துக் கொள்கின்றது. ஏனெனில், ‘புலம்பெயர் சமூகம்’ என்கிற அடையாளம், தங்களது தாயகப் பகுதிகளிலிருந்து இன்னொரு சக்தியினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களைக் குறிக்கும் என்பதால், அது வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்களுக்கு பொருந்தாது என்று இலங்கை அரசாங்கம் வாதிடுகிறது. அதாவது, இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள தமிழ் மக்களை யாரும் வெளியேற்றப்படவில்லை என்றும், அவர்களே சுயவிருப்பில் வெளியேறியிருப்பதாகவும் அரசாங்கம் கூறுகின்றது. இதன்பிரகாரம், வெளிநாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்கள் அல்லது புலிகளுக்கு ஆதரவளித்த தமிழ் அமைப்புக்கள் மீதான தடை என்றே அரசாங்கம் அதனை வரையறுக்கின்றது.
2015 ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் சந்தித்த தோல்வி எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புக்களினால் மாத்திரம் நிகழ்த்தப்பட்டது அல்ல என்பது ராஜபக்ஷக்களின் வாதம். மேற்கு நாடுகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தங்களுக்கு எதிராக கணிசமான பங்கை ஆற்றின என்பது அவர்களின் தொடர் குற்றச்சாட்டுக்கள். 2015 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகி தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொண்டு தங்காலை சென்ற மஹிந்த ராஜபக்ஷ, அங்கு கூடியிருந்த மக்களிடம் தான் தமிழ் மக்களினாலும், பிரிவினை சக்திகளினாலும் வீழ்த்தப்பட்டதாக கூறினார். ஒட்டுமொத்த நாட்டினதும் வாக்களிப்பு வீதம் அதனை காட்டுவதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த இடத்திலிருந்துதான், ராஜபக்ஷக்கள் தங்களது மீள் வருகைக்கான பயணத்தை ஆரம்பித்தார்கள்.
இனவாதம், மதவாதம் என்கிற அடிப்படைவாதத்தினை அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இன்னும் இன்னும் மோசமாக முன்னிறுத்தி ராஜபக்ஷக்கள், தங்களை மீள நிறுவினார்கள். அதுதான், 2017 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பிரதிபலித்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் உள் முரண்பாடுகள், மைத்திரியின் சதிப்புரட்சி என்று நாட்டு மக்கள் ஆட்சியில் கடும் விமர்சனங்களோடு இருந்தபோது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நல்லாட்சியாளர்களை ஒட்டுமொத்தமாக ஆட்டங்காண வைத்தது. இவ்வாறான ஒரு பலவீனமான ஆட்சிக்கு எதிராக ராஜபக்ஷக்களின் எழுச்சி என்பது தென்னிலங்கையில் இயல்பாக எழுந்தது. அதில், மதவாக எண்ணெய் ஊற்றி இனவாதத் தீயைப் பற்ற வைத்து ராஜபக்ஷக்கள் பெருவெற்றி கண்டார்கள். 2019 ஜனாதிபதித் தேர்தலிலும், 2020 பொதுத் தேர்தலிலும் ராஜபக்ஷக்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் அதற்கான சாட்சிகளாகும்.
தேர்தல் காலத்தில் இலகுவாக வாரி வழங்கிவிடக் கூடிய வாக்குறுதிகள் போல, ஆட்சியை நடைமுறைப்படுத்துதல் அல்லது கொண்டு செலுத்துதல் அவ்வளவு இலகுவாக அமைந்துவிடுவதில்லை. ராஜபக்ஷக்கள் அவ்வாறானதொரு சிக்கலை தற்போது சந்தித்து நிற்கிறார்கள். போர் வெற்றி மமதையோடு 2015க்கு முன்னரான காலத்தில் ராஜபக்ஷக்கள் மக்களின் மனநிலை, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை உள்வாங்காது ஆடிய ஆட்டம் அவர்களை தோற்கடித்திருந்தது. அப்படியானதொரு நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். ஆனாலும், ஓர் இராணுவ அதிகாரியின் சிந்தனைகளும், அரசியல்வாதியின் சிந்தனைகளும் முரண்படும் புள்ளியில் தற்போதையை ராஜபக்ஷக்களின் ஆட்சி தடுமாறுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ அணுகுமுறையோடு ஆட்சியை முன்னெடுக்க எத்தனிக்கும் போது, பிரதமர் மஹிந்தவும், பஷில் ராஜபக்ஷவும் அரசியல்வாதிகளுக்கே உரிய அணுகுமுறை, நெகிழ்வுப் போக்கோடு இருக்க எத்தனிக்கிறார்கள். இதனால், அமைச்சரவை உள்ளிட்ட ஆளுங்கட்சிக்குள் முரண்பாடான நிலைகொண்ட குழுக்கள் நிலைபெறுகின்றன. முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு, அதனால் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
தேர்தல் மேடைகளில் பேசப்படும் அடிப்படைவாதம் போல, அதனை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் இலகுவானவை அல்ல. ஏனெனில், ஒவ்வொரு அடிப்படைவாத நடவடிக்கைகளும் இன, மத சுதந்திரம் மற்றும் சர்வதேச உறவுகளில் தாக்கம் செலுத்த வல்லன. கொரோனா தடுப்பு விதிகளைப் பயன்படுத்தி ஜனாஸாக்களை எரித்தமை முஸ்லிம் நாடுகளை கோபப்படுத்தியது. அதுபோல, புர்கா தடை பற்றிய அமைச்சர்களின் பேச்சு, ஜெனீவாவில் இலங்கை தோற்றுப்போவதற்கு காரணமாக அமைந்தது. என்னதான், பாகிஸ்தான் பிரதமரை இலங்கைக்கு அழைத்து உபசரித்த போதிலும், பங்களாதேஷுக்கு உடல்நலக்குறைவோடு சிரமப்படும் மஹிந்த ராஜபக்ஷவை அனுப்பி ஆதரவு கோரிய போதும்கூட அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவளிக்கவில்லை. பல நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்து, புதிய பிரேரணை நிறைவேறுவதற்கு உதவின. இப்படி, உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் அடிப்படைவாத நடவடிக்கைகள் சர்வதேச ரீதியில் சிக்கல்களை ஏற்படுத்தும், அது தொடரும் போது ஆட்சி மாற்றமொன்றுக்கான ஏதுகைகளுக்கு வெளிநாடுகள் ஆதரவளிப்பதும் உண்டு.
ராஜபக்ஷக்களின் மீள்வருகையின் போது, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத பேச்சுக்களையும் தாண்டி, முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத மதவாத பிரச்சாரம் முன்னணியில் இருந்தது. அமைச்சரவையில் அலி சப்ரி என்கிற கோட்டாவின் தீவிர ஆதரவாளர் தவிர எந்தவொரு முஸ்லிமும் சேர்க்கப்படவில்லை. இனியும் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஆனாலும், முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புப் பிரச்சாரம் என்கிற நிலையிலிருந்து மீண்டும் தமிழ் மக்களுக்கு எதிரான எதிர்ப்பு பிரச்சாரம் என்கிற உத்தியை நோக்கி ராஜபக்ஷக்கள் நகர்வதற்கான காட்சிகளை, புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை காட்டுகின்றது.
ஏனெனில், முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புப் பிரச்சாரத்தினை முதன்மையாக பேணியதன் விளைவு, முஸ்லிம் நாடுகளை குறிப்பிட்டளவு கோபப்படுத்தியிருக்கின்றது. கடந்த காலத்தில் கண்ணை மூடிக்கொண்டு இலங்கையின் செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் ஆதரித்து வந்த முஸ்லிம் நாடுகள் தற்போது விமர்சனங்களை முன்வைக்கின்றன. ஜெனீவா பிரேரணை போன்ற முக்கிய தருணத்தில் கூட கைவிடுகின்றன. அப்படியான நிலை தொடர்ந்தால் சீனா சார்பு நாடுகளைத் தவிர சர்வதேச ரீதியில் இலங்கையை ஆதரிப்பதற்கான நாடுகள் இல்லை எனும் சூழல் ஏற்படலாம். அதனைத் தவிர்த்துக் கொள்ளும் தேவை என்பது ராஜபக்ஷக்களுக்கு தவிர்க்க முடியாதது. அதன்போக்கிலேயே, தமிழ் மக்களுக்கு எதிரான எதிர்ப்புப் பிரச்சாரத்தினை முதன்மைப்படுத்தும் கட்டத்துக்கு ராஜபக்ஷக்கள் மீண்டும் வந்திருக்கிறார்கள்.
தடைவிதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களோடு தொடர்புகளை பேணுபவர்கள், கடந்த காலத்தில் பேணியோர் என்று அவர்களுக்கு எதிரான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் தமிழ் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் ஒருவர், பேஸ்புக் பக்கத்தில் வெளிநாட்டு வாழ் நபர் ஒருவரோடு நட்புப் பட்டியலில் இருந்தார் என்பதற்காக கொழும்புக்கு அழைத்து விசாரிக்கப்பட்டிருக்கின்றார். இதனை, தொடர் அச்சுறுத்தலுக்கலான பெரும் எச்சரிக்கையாக தமிழ் மக்கள் கொள்ளலாம். அதிலும், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் உரிமையாளர் ராஜபக்ஷக்களுக்கு மிகவும் நெருக்கமானவர். அப்படிப்பட்ட நிலையிலேயே, விசாரணை வளையத்துக்குள் பேஸ்புக் நட்பு பட்டியலை முன்வைத்து ஒருவர் வருகிறார் என்றால், ஏனையவர்களின் நிலை எப்படியானது என்பது தெரியும்.
பேஸ்புக் நட்பு, தொடர்பு, சமூக ஊடாடல் என்று ஆரம்பித்து எல்லாவற்றுக்கும் பயங்கரவாத சிந்தனை, பிரிவினைவாத சூழ்ச்சி என்று வர்ணம் பூசப்படும். அதனை தென்னிலங்கையில் பெரும் பேசு பொருளாக்கி, மீண்டும் தங்களை நாட்டின் காவலர்களாக காட்டி ஆட்சியை தக்க வைப்பதற்கு ராஜபக்ஷக்கள் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான கட்டங்களில், ஆர்வக்கோளாறு வேலைகளில் சிக்காமல், சூழலைப் புரிந்து கொண்டு கவனமாக அடுத்த கட்டங்களை நோக்கி நகர்வது தமிழ் மக்களின் பொறுப்பாகும். ஏனெனில், தமிழ் மக்களின் சின்ன சறுக்கல்களைக்கூட ராஜபக்ஷக்கள் தங்களின் பெரு வெற்றிகளுக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.