கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன், கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட போது, வாக்குகள் பிரிந்து தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் என்று பல தரப்புக்களினாலும் எச்சரிக்கப்பட்டது. தேர்தல் முடிவிலும் அது பிரதிபலித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை, தவராசா கலையரசனுக்கு வழங்கி அம்பாறைக்கான தமிழர் பிரதிநிதித்துவ வெற்றிடத்தை நிவர்த்தி செய்தது.
ஆனால், கருணா அம்மானின் அம்பாறைக்கான வருகையை அன்று கணிசமான மக்கள் ஆதரித்தார்கள். புத்திஜீவிகளும், இளைஞர்களும்,சமூகத்தில் ஆளுமை செலுத்துவோரும் கருணாவின் கடந்த கால வரலாற்றைப் புறந்தள்ளி, அவருக்கு ஆதரவளித்தார்கள். குறிப்பாக, அம்பாறையில் இருந்து புலம்பெயர்ந்துள்ளவர்களில், குறிப்பிட்டளவானோர் கருணாவின் வெற்றியை சாத்தியப்படுத்தும் நோக்கில் பிரச்சாரத்துக்கான நிதிப்பங்களிப்பைக் கூட செய்திருக்கிறார்கள். தமிழ்த் தேசிய சிந்தனைகளில் இருந்து எந்தவொரு தருணத்திலும் தடம்புரளாத அம்பாறை தமிழ் மக்கள் ஏன் கருணாவை ஆதரிக்க வேண்டி வந்தது? அதன் பின்னணி தொடர்பில் அம்பாறையில் தோல்வியடைந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் ஆராயவும் இல்லை. அதுகுறித்து பேசவும் இல்லை. மாறாக, கருணா வாக்கினைப் பிரித்தார். அதனால் தோல்வியடைந்தோம் என்ற அளவில் விடயத்தைக் கடந்துவிட்டன.
கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை தமிழர் மகா சபைக் கட்சியில் போட்டியிட்ட கருணா அணியினர், 29,379 வாக்குகளைப் பெற்றனர். கூட்டமைப்பு சுமார் நான்காயிரம் வாக்குகள் பின்னடைவோடு, 25,255 வாக்குகளையே பெற்றது. 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு 45,421 வாக்குகளை அம்பாறையில் பெற்றது. இதன்மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவானார். ஆனால், 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், கூட்டமைப்பு 20,000 வாக்குகளை கருணாவிடம் இழந்தது. அத்தோடு, கருணாவால் சுமார் 10,000 பேரை மேலதிகமாக வாக்களிக்க அழைத்துவர முடிந்திருந்தது. கடந்த பொதுத் தேர்தலில் ஈபிடிபிக்கு கிடைத்த சில நூறுகளையும் சேர்த்தால் 55,000 தமிழ் வாக்குகள் அம்பாறையில் அளிக்கப்பட்டிருக்கின்றது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் தேசம் முழுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நோக்கிய அலை அடித்தது. கூட்டமைப்புக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்திய எந்தத் தமிழ்க் கட்சியாலும், அந்த அலைக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அந்த அலையடித்த தருணத்தில்கூட அம்பாறையில் 45,000 வாக்குகளே அளிக்கப்பட்டன. ஆனால், அடுத்த தேர்தலில் மேலதிகமாக 10, 000 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் அந்த வாக்குகளை கருணா அணியால் சேர்க்க முடிந்திருக்கின்றது என்றால், அம்பாறை தமிழ் மக்கள் தெளிவான செய்திகளை சொல்ல முயன்றிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
கடந்த பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர், புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் அம்பாறையைச் சேர்ந்த புலமையாளர் ஒருவர் இந்தப் பத்தியாளரோடு பேசினார். அப்போது, "...தமிழர் தாயகம் முழுவதும் தமிழ்த் தேசிய வாக்குகள் பிரிந்து தமிழ்த் தேசியம் சாரா சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும் விழுந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் அங்கஜனின் வெற்றியும், மட்டக்களப்பில் அமலின் (வியாழேந்திரன்) வெற்றியும் அதற்கான உதாரணங்கள். ஆனால், அம்பாறையில் கருணாவுக்கு கிடைத்த வாக்குகளை அவற்றோடு ஒப்பிட முடியாது. கருணா, ராஜபக்ஷக்களின் விசுவாசி என்ற போதும், அம்பாறை மக்கள் மட்டக்களப்பிலிருந்து வந்த அவருக்கு சுமார் 30,000 வாக்குகளை அளித்திருக்கிறார்கள். அதுவும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்களினால் அது சாத்தியமாகியிருக்கின்றது. இந்த வாக்குகள் தமிழ்த் தேசியத்தின் வாக்குகள். கடந்த காலங்களில் சிங்கள காடையர்களின் தொல்லைகள், முஸ்லிம்களின் நெருக்கடிகளைச் சந்தித்து நின்ற தமிழ் மக்களின் வாக்குகள். தங்களுக்கு ஒரு சேவியர் (பாதுகாவலன்) வேண்டும் என்பதற்காக கருணாவிற்கு ஆதரவளித்திருக்கிறார்கள். கருணா தேர்தல் பிரச்சாரங்களில் முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கக்கினார், ஆனாலும் அவருக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை, பறிபோகும் தமிழர் நிலங்களை காக்க முடியாமை போன்ற கூட்டமைப்பின் கையாலாகத் தனத்தின் விளைவுதான், கருணாவின் எழுச்சியும், பிரதிநிதித்துவ இழப்பும். இதற்கு மக்களை நோக்கி யாரும் கை நீட்டக் கூடாது..." என்றார்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தோல்விகள், யாழ்ப்பாணத்துக்குள் சுருங்கிக் கொள்வதில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் யாழ்.மையவாத சிந்தனைகளைத் தாண்டி நின்று சிந்திப்பதில்லை. அதற்கு கட்சிகள் மாத்திரமல்ல, புலமையாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல் ஆய்வாளர்கள் என தங்களை முன்னிறுத்தும் தரப்பினர் என்று அனைவரும் அடக்கம். முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த பதினைந்து ஆண்டுகளில் பிரதான தமிழ்த் தலைவராக இரா.சம்பந்தன் இருக்கிறார். அவர், கிழக்கைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவரின் சிந்தனை என்பது யாழ். மையவாதம் மற்றும் கொழும்பு மேட்டுக்குடி சிந்தனைகளின் கலவையாகும். அவர் ஒருபோதும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளின் தீவிரம் குறித்து அவ்வளவு அக்கறை கொண்டவராக இருந்ததில்லை. தற்போது உடலளவில் அவர் தளர்ந்திருக்கின்றார். அதனால் திருகோணமலைக்கான தமிழர் பிரதிநிதித்துவ கடமைகள் ஆற்றப்படாமல் இருக்கின்றன. ஆனபோதும், அவர் அது தொடர்பில் அவ்வளவு அக்கறையை வெளிப்படுத்தவில்லை. அவர் இன்னமும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பிடித்துக் கொண்டிருப்பதில் கவனமாக இருக்கிறார். அதேபோல, கடந்த பொதுத் தேர்தலின் பின்னரும், கூட்டமைப்புக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்தையும், தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவுக்கு வழங்குவதற்காக வாதாடியவர் சம்பந்தன். மாவையும் வயது மூப்பினால் ஏற்படும் உபாதைகளோடு அல்லாடுபவர். அவரினால் அம்பாறைக்கான பிரதிநிதியாக மாவிட்டபுரத்திலிருந்து தொடர்ச்சியாக சென்றுவர முடியுமா, மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைக்காண முடியுமா என்பது பற்றியெல்லாம் சம்பந்தன் சிந்திக்கவில்லை.மாறாக, யாழ். மையவாத சிந்தனையின் தேவையை நிவர்த்திக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் பக்கத்தில் நின்றார். அதனால்தான், மாவைக்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்றார். ஆனால், அவரின் கருத்துக்கள் உள்வாங்கப்படாமல், கலையரசனுக்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட்டது. அதற்குப் பின்னால், அம்பாறை மக்களை திருப்திப்படுத்தும் உத்தியும், உட்கட்சி அரசியலும் இருந்தது.
அடுத்த பொதுத் தேர்தலில் அம்பாறையில் கருணா போட்டியிட்டாலும், அவரினால் கடந்த முறை பெற்ற வாக்குகளை பெறமுடியுமா என்றால், அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஆனால், அம்பாறை தமிழ் மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் வழங்கிய செய்தியை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு அவ்வளவு ஆபத்துக்கள் இல்லை. யார் எந்தக் கட்சியில் வெற்றிபெற்றாலும், அங்கு தமிழ் பிரதிநிதித்துவம் இருக்கும். ஆனால், அம்பாறை, திருகோணமலை போன்ற ஆண்டாண்டு காலமாக பௌத்த சிங்கள பேரினவாதத்தினால் கபளீகரம் செய்யப்படும், தமிழர் தாயக நிலங்களில் பிரதிநிதித்துவம் என்பது கொஞ்சம் சறுக்கினாலே, இழக்கப்பட்டுவிடும். தமிழ்த் தேசிய அரசியலின் எழுச்சி, பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக நிகழ்ந்தது. அதுதான் இன்றும் அதன் ஆணிவேர். ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் என்பது யாழ். மையவாத அரசியலாக சுருங்கும் போது, தமிழர் தேசத்தின் பெரும்பகுதி அனாதையாக்கப்படும் அவலம் நிகழுகின்றது. அதனால்தான், அம்பாறை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தனித்துவ பிரச்சினைகள் குறித்து அவ்வளவு அக்கறை வெளிப்படுத்தப்படுவதில்லை. இன்று கிட்டத்தட்ட அம்பாறையை 'திகாமடுல்ல'வாக நினைத்து, பல தமிழ்த் தலைவர்கள் மறக்கத் தொடங்கிவிட்டார்கள். இதுதான், இப்போது திருகோணமலைக்கும் நிகழுகின்றது. தமிழர் தேசத்தின் தலைநகர் என்று திருகோணமலையை சொன்னால் மட்டும் போதாது, அங்கு தமிழர் இருப்பைக் காப்பாற்றுவதற்கான சிந்தனைகளை செயற்பாட்டுத் தளத்துக்கு நகர்த்த வேண்டும். மேடைப் பேச்சுக்களினாலும் உணர்வூட்டும் எழுத்துக்களினால் பெரிய மாற்றங்களை நிகழ்த்த முடியாது. ஏனெனில், பேரினவாதமோ தமிழர் நிலங்களை கபளீகரம் பண்ணுவதற்கான அரச இயந்திரத்தின் ஒத்தாசையோடும் பௌத்த பீடங்களின் நிகழ்ச்சி நிரல்களோடும் ஒவ்வொரு நொடியும் சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றது. அதனை எதிர்த்து நின்று, களத்தை வெற்றி கொள்வதற்கு அர்ப்பணிப்பான செயற்பாட்டுத் தலைமை வேண்டும். அதனை, தமிழ்த் தேசியக் கட்சிகள் பெரியளவில் வெளிப்படுத்துவதில்லை. அந்தக் கட்சிகளின் ஒற்றை இலக்காக 'தேர்தல் வெற்றிகள்' சுருங்கிவிட்டன.
திருகோணமலையும் அம்பாறையும் முழுவதுமாக இழக்கப்படும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையை இன்று மட்டக்களப்பும், முல்லைத்தீவும், வவுனியாவும் எதிர்கொண்டிருக்கின்றன. அடுத்து அது மன்னாருக்கு பரவும். இறுதியாக யாழ்ப்பாணத்தையும் கபளீகரம் செய்வதோடு முடியும். யாழ்ப்பாணத்தைச் சுற்றி, தமிழ் மாவட்டங்களே இருக்கின்றன. அதனால், நில ஆக்கிரமிப்பு என்பது அவ்வளவு இலகுவாக நடந்துவிட வாய்ப்பில்லை. அதுபோல, தமிழர் பிரதிநிதித்துவத்துக்கும் சிக்கல் இல்லை என்பதுதான், யாழ். மையவாத சிந்தனையாளர்கள், தமிழர் நிலத்தின் பெரும்பான்மையான நிலப்பகுதி குறித்தும், அவை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து அவ்வளவு அக்கறையின்றி இருப்பதற்கான காரணமாகும். இன்றைக்கு எந்த அரசியல் முடிவு, எடுக்கப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் இருந்துதான் எடுக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று பேசுவோரும், புறக்கணிப்புக் கோசத்தை முன்வைப்பவர்களும்கூட யாழ்ப்பாணத்தைத் தாண்டி சிந்திப்பதில்லை. இனமொன்றின் அரசியல் முடிவை, அந்தச் சனக்கூட்டம் பரவியிருக்கின்ற பகுதிகளில் கருத்துக் கேட்டு, வாதப் பிரதிவாதங்களை நடத்தி எடுக்க வேண்டும் என்ற எந்தவித பொறுப்பும் இல்லை. மாறாக, யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு தங்களுக்கு வாகான முடிவுகளை எடுக்கிறார்கள். அதற்கு சில புலம்பெயர் தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றால் போதுமென்று நினைக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால், தமிழ்த் தேசிய அரசியலில் வீழ்ச்சி சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும். இன்றைக்கு யார் விரும்பினாலும் இல்லையென்றாலும் மட்டக்களப்பில் பிள்ளையானின் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) அரசியல் வெற்றியை யாரினாலும் புறந்தள்ள முடியாது. அவரின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குப் பின்னால், சாதாரண மக்கள் மாத்திரமல்ல, தங்களை வெளிக்காட்டிக் கொள்ளவிட்டாலும் புலமையாளர்களும், புலம்பெயர்ந்த மட்டக்களப்பின் மக்களும் கணிசமாக இருக்கிறார்கள். அது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தோல்விகளினால் நிகழ்ந்தது.
யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் வெற்றியையும் மட்டக்களப்பில் பிள்ளையானின் வெற்றியையும் சில தரப்பினர் ஒன்றாக ஒப்பிடுகிறார்கள். ஆனால், இரண்டும் ஒன்றல்ல. ஏனெனில், ஈபிடிபிக்கான வாக்குகள் என்பது டக்ளஸின் காலத்துக்குப் பின்னால் கரைந்துவிடும். இதுதான், தமிழ் ஆயுதக் குழுக்களாக இருந்து கட்சிகளாக மாறிய புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிவற்றுக்கான எதிர்கால நிலையும். ஆனால், பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பில் தனிநபர் அடையாளத்தைத் தாண்டி தன்னையொரு கட்சியாக வளர்த்துக் கொண்டிருக்கின்றது. பிள்ளையான் இல்லையென்றாலும், அந்தக் கட்சியோடு கணிசமான மக்கள் இருப்பார்கள். இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் போதும், தமிழர் தாயகத்தில் ஒவ்வொரு பிரதேசத்தினதும் தனித்துவப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அதற்கான செயற்திட்டங்களை வகுத்துச் செயற்பட வேண்டும். அதனைச் செய்யாமல், தொடர்ச்சியாக தமிழ்த் தேசியத்தின் பெயரினால் தமிழ்த் தேசியக் கட்சிகள் தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணக்கூடாது. அதைக் கட்சிகள் மாத்திரமல்ல, தமிழ்த் தேசியத் தரப்புக்கள் அனைத்தும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியத் தரப்புக்கள் முதலில் யாழ். மையவாத சிந்தனையில் இருந்து வெளிவந்து, 'தமிழ்த் தேசிய நோக்கு நிலை'யை தமிழர் தேசம் சார்ந்து வடிவமைக்க வேண்டும். அது சமூக பொருளாதார கட்டமைப்பின் ஒவ்வொரு படிநிலையில் இருந்தும் நிகழ வேண்டும். அதுதான் தமிழ்த் தேசிய அரசியலை பலப்படுத்த உதவும். மாறாக, தேர்தல் அரசியலைப் பிரதானப்படுத்தி மாத்திரம் சிந்தித்தால், கடந்த தேர்தலில் கருணா செலுத்திய தாக்கம் மாதிரியான விடயங்களை, தமிழர் தேசத்தில் ஒவ்வொரு பகுதியும் எதிர்கொள்ள வேண்டி வரலாம். அப்படி தொடர்ச்சியாக நிகழ்ந்தால் தமிழ்த் தேசிய அரசியல் மெல்ல மெல்ல கரைய ஆரம்பிக்கும். அது, எதிர்காலத்தில் தமிழர் இருப்பை இல்லாமற் செய்துவிடும். அதனைப் புரிந்துகொள்ளாமல் இன்று குறுகிய நலன்களில் அக்கறை கொண்டு கோட்டை விட்டுவிட்டு, எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத் தரப்பினர் புலம்பிப் பயனில்லை.