கடந்த சனிக்கிழமை தென் சீனக் கடலில் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான யூ எஸ் எஸ் கனெக்டிகட் மர்மப் பொருள் ஒன்றின் மீது விபத்தில் சிக்கியுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்ற விபரத்தை அமெரிக்கக் கடற்படை இன்னமும் வெளியிடவில்லை.
எனினும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் தற்போது நன்றாக இயங்குவதாகவும் அமெரிக்காவின் குவாம் நோக்கிப் பயணித்து வருவதாகவும் தெரிவித்த அமெரிக்க அதிகாரிகள் விபத்து ஏற்பட்ட சமயத்தில் 15 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் இவர்களுக்குக் கப்பலிலேயே சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் கூடத் தெரிவித்துள்ளனர்.
யாருக்கும் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. தென் சீனக் கடல் பரப்பில் சீனாவின் ஆதிக்கத்தை ஈடு செய்ய அமெரிக்கா அண்மைக் காலமாக கண்கானிப்பு நோக்குடன் பல போர்க் கப்பல்களை அனுப்பி வருவதால் அப்பகுதியில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆப்கானிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுபான்மை ஷியா முஸ்லிம்களது பள்ளி வாசல் ஒன்றின் மீது தொழுகை நடந்த சமயத்தில் நடத்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் அபாட் மசூதியின் மீது மேற்கொள்ளப் பட்ட இத்தாக்குதல் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின் நடத்தப் பட்ட மிக மோசமான தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததும் உள்ளனர்.