சிட்னி போண்டி கடற்கரையில், ஞாயிற்றுக்கிழமை யூத விடுமுறையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
போண்டி கடற்கரையில்,நடந்த துப்பாக்கிச் சூடு குறித்த மேலும் சில புதிய விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதில் இறந்தவர் எண்ணிக்கை 15 எனத் தெரிவித்துள்ளார்கள். யூத கொண்டாட்டத்தின் போது 15 பேரை சுட்டுக் கொன்ற இரண்டு துப்பாக்கிதாரிகள் தந்தையும் மகனும் என அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.
இச் சம்பவத்தில் 50 வயது தந்தை இறந்துவிட்டார் எனவும், 24 வயது மகன், தற்போது மருத்துவமனையில் உள்ளார்," என்றும், வேறு எந்த குற்றவாளிகள் அறியப்படவில்லை எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.
"ஆயுதாரிகளின் தாக்குதலால் உயிர் இழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையிலும், மற்றும் காயமடைந்த அனைவருக்கும் ஆறுதல் தரும் வகையிலும், ஆஸ்திரேலியா நாடு முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்" என்றும், "நமது நாட்டின் இதயத்தைத் தாக்கிய ஒரு தீய, யூத எதிர்ப்பு, பயங்கரவாதச் செயல் இது " என்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.
இத் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனங்களையும், பலியானவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி "கொடூரமான பயங்கரவாத தாக்குதலை" கண்டித்து, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்,இத்தாக்குதலுக்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, இலண்டனில் யூத தளங்களில் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு லண்டன் போலீசார் பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
