அண்மையில் சோமாலியாவின் கிஸ்மாயோ என்ற நகரில் காற்பந்து வீரர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது.
இதில் வீரர்கள் உட்பட 5 பேர் தலத்திலேயே பலியானதாகவும், 25 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை எந்தவொரு அமைப்பும் இச்சம்வத்துக்குப் பொறுப்பேற்கவில்லை. சோமாலியாவின் அதிபர் முகமது அப்துல்லாஹி முகம்மது உயிரிழந்த வீரர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்ததுடன் இச்சம்பவத்துக்கு அல்ஷபாப் தீவிரவாத அமைப்பே காரணம் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
பெருவின் கல்லானா நகருக்குக் கிழக்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளிக்கிழமை மாலை 5:10 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப் படுத்தியது. இந்த நிலநடுக்கம் காரணமாக பாரியளவு சேதமோ, உயிரிழப்புக்களோ ஏற்படவில்லை என்ற போதும் ஒரு சில கட்டடங்கள், கடைத் தொகுதிகள் சேதமடைந்தன.
வலுவான அதிர்வு காரணமாக பொது மக்கள் அச்சத்துடன் வீதிகளில் குவிந்தனர். சில இடங்களில் மின் துண்டிக்கப் பட்டதாகவும், 3 தீயணைப்பு நிலையங்களும் பாதிக்கப் பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.