ஆப்கானில் இருந்து பெரும்பாலான அமெரிக்க துருப்புக்கள் மீளப் பெறப்பட்டு வரும் நிலையில், இதனால் அங்கிருந்து தலிபான்களால் அச்சுறுத்தல் அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக ஜுன் இறுதிக்குள் ஆப்கானுடனான எல்லையில் வேலி கட்டி முடிக்கப் படும் என பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இத்தகவலை பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷெயிக் றாஷிட் அஹ்மெட் தேசிய அசெம்ப்ளியில் உறுதிப் படுத்தியதாக பாகிஸ்தானின் டாவ்ன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் அதிகரித்த தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்காக 2017 ஆமாண்டு ஆப்கான் எல்லையுடன் தனது 2640 கிலோமீட்டர் நீளமான வேலியைக் கட்டும் பணியை பாகிஸ்தான் ஆரம்பித்திருந்தது. இந்த வேலி கடும் மலைப் பாங்கான பகுதிகளின் ஊடாகவும் செல்கின்றது. இந்தக் கடினமான எல்லை வரைவு 1896 இல் பிரிட்டன் ஆட்சியாளர்களால் உருவாக்கப் பட்டிருந்தது.
இந்த இரட்டை அடுக்கு வேலித் தடுப்பு சுவர் பாகிஸ்தான் பக்கம் 3.6 மீட்டரும், ஆப்கான் பக்கம் 4 மீட்டரும் உயரமானதும் ஆகும். இந்த வேலியின் அருகே சுமார் 100 இராணுவத் தடுப்பு முகாம்களும் பல கண்காணிப்பு கமெராக்களும், அகச்சிவப்பு கதிர் உணர்வு கருவிகளும் பொருத்தப் படவும் திட்டமிடப் பட்டுள்ளது.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
சீனாவின் தலை சிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஜாங் ஜீஜியான் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். ஜூன் 17 ஆம் திகதி காலை 9:34 மணிக்கு கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து இவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது. இவரது மரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை.
ஹார்பின் என்ற பல்கலைக் கழகத்தின் அணு அறிவியல் தொழிநுட்ப கல்லூரி பேராசிரியராகவும், சீன அணுக் கழகத்தின் துணைத் தலைவராகவும், இருந்துள்ள அவர் பல்கலைக் கழகத்தின் கம்யூனிஸ்டு கட்சி நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார் எனத் தெரிய வருகின்றது.