இந்த நூற்றாண்டில் ஜேர்மனி சந்தித்த மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாக அண்மையில் மேற்கு ஜேர்மனியில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு மாறியுள்ளது.
வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப் பட்ட ரெயின்லேண்டு-பலட்டினேட் மாநிலத்தை ஜேர்மனி சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக ஜேர்மனியில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கில் சிக்கி சுமார் 157 பொது மக்கள் வரை உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக் கணக்கானவர்கள் காணாமற் போயிருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு மிக விரைவான அத்தியவாசியப் பொருட்கள் மற்றும் நிதியுதவி அளிக்கப் படும் என ஜேர்மனி சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் அறிவித்துள்ளார்.
மேலும் தாம் பாதிக்கப் பட்டவர்களின் பக்கம் இருப்பதாவும், நிலமை மிகவும் தீவிரமாக உள்ளதாகவும் அடெனாவு என்ற சிறிய வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்த போது ஏஞ்சலா மேர்கெல் தெரிவித்துள்ளார். இதுதவிர புதன்கிழமை அளவில் குறுகிய கால நிவாரணத் திட்டங்கள் அரசால் விரைந்து அமுல் படுத்தப் படும் என்றும் மேர்கெல் உறுதியளித்துள்ளார்.
இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -
சனிக்கிழமை அமெரிக்காவின் சிக்காக்கோ நகருக்கு வெளியே ஜீப் வண்டியில் வந்த மர்ம நபர்கள் நடைபாதையில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டனர். இதில் 3 பருவ வயதினரும், 12 வயதுடைய ஒரு சிறுமியும் அடங்குகின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப் படவுமில்லை.