சனிக்கிழமை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது காதலியான கேரி சைமண்ட்ஸ் என்பவரை வெஸ்ட்மின்ஸ்டெர் தேவாலயத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பிரிட்டன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இது தொடர்பில் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டார்.
இந்த திருமண வைபவத்துக்கு கடைசி நேரத்தில் தான் பிரமுகர்கள் அழைக்கப் பட்டதாகவும், இத்திருமணம் தொடர்பில் மூத்த அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே விபரம் தெரியாது என்றும் கூறப்படுகின்றது. கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இங்கிலாந்தில் தற்போது திருமண நிகழ்வொன்றுக்கு அதிகபட்சம் 30 பேர் மாத்திரமே கூட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 56 வயதாகும் பிரதமர் ஜோன்சனும், 33 வயதே ஆகும் சைமண்ட்ஸும் 2019 இல் ஜோன்சன் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்தே சேர்ந்து வாழ்கின்றார்கள்.
கடந்த வருடம் இவர்கள் தமக்கு குழந்தை பிறக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர். மேலும் இவ்வருடம் ஏப்பிரல் மாதம் இந்த ஜோடிக்கு வில்ஃப்ரெட் லாவ்ரியே நிக்கோலஸ் ஜோன்சன் என்ற ஆண்குழந்தை பிறந்தது. முன்னதாக இந்த ஜோடியின் திருமண அழைப்பிதழ்கள் ஜூலை 2022 என திகதி குறிக்கப் பட்டு அவர்களின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பப் பட்டிருந்ததாக தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.