பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை மின்சாரம், தண்ணீர், பெட்ரோல் இல்லை. இஸ்ரேலிய பணயக்கைதிகள் வீடு திரும்பும் வரை மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, பெட்ரோல் லாரிகள் காசாவிற்குள் நுழையாது என்று இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "மனிதாபிமானத்திற்கான மனிதாபிமானம் என்னவென்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். அறநெறி பற்றி யாரும் விரிவுரை செய்யத் தேவையில்லை என்றார்.
காசா மீது கடும் போர் தொடுத்துள்ள இஸ்ரேலிய இராணுவம், ஐ.நா தடைசெய்துள்ள ஆயதங்கள் பலவற்றையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் பாவித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. காசா பகுதியில் ஆறு நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,200 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 5,600 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு மட்டும் 51 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 339 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். காஸாவின் ஒரே மின் உற்பத்தி நிலையம் எரிபொருள் இன்றி மூடப்பட காசா முற்றாக இருளில் மூழ்கியுள்ளது.
இது இவ்வாறிருக்க, இந்த யுத்தம் இப்போது வேறுவடிவம் பெறுவதாகவும், இது யுத்தத்தின் நீட்சியையும், தன்மையினையும் மாற்றிவிடும் அபாயம் உள்ளதாகவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதல் குறித்து தொலைபேசி வழியாக உரையாடியபோது, பாலஸ்தீனத்திற்கு எதிரான போர்க்குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் அவசியத்தை இருவரும் பகிர்ந்து கொண்டனர். மேலும் இஸ்லாமிய ஒற்றுமை வலியுறுத்தப்பட்டதுடன், மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் குற்றங்களும், அமெரிக்கா கொடுக்கும் பச்சை விளக்கும் அதன் ஆதரவும், அழிவுகரமான பாதுகாப்பின்மையைக் கொண்டுவரும் என்று இருவரும் கருதுவதாக உரையாடியுள்ளனர்.
இதேவேளை ஹமாஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார். அவர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இஸ்லாமிய குழுவிற்கு எதிரான போரில் யூத அரசை வழிநடத்த தேசிய அவசரகால அரசாங்கத்தை தொடங்குவதாக அறிவித்த பின்னர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு "ஹமாஸின் ஒவ்வொரு உறுப்பினரும் இறந்த மனிதர்கள்" என்று எச்சரித்தார். இதற்கிடையில், ஹமாஸ் அறிவித்த மூன்று பணயக்கைதிகளின் விடுதலையை யூத ஊடகங்கள் மறுத்துள்ளன எனவும் தெரியவருகிறது. அல்ஜசிரா தொலைக்காட் ஊடகத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.