ஆஸ்திரேலியாவின் 47-வது டெஸ்ட் கேப்டனாக பட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் அடுத்த மாதம் 8-ம் திகதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வரும் டிம் பெய்ன், பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய குற்றச்சாட்டில் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பின் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணியில் 47-வது டெஸ்ட் கேப்டனாக பட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது. இதன் மூலம் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முழுநேர கேப்டனாக இருக்கும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுகிறார். ஸ்டீவ் ஸ்மித் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.